மீண்டும் வேகமெடுத்த கொரோனா.. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் தனிமைப்படுத்தப்பட அறிவுரை.

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2021, 11:26 AM IST
Highlights

குறிப்பாக புதிய வழக்குகள் மகாராஷ்டிராவில் வேகமாக பரவி வருகிறது. இதனால்  அம்மாநிலத்தில் உள்ள அமராவதி மற்றும் யவத்மாலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், தமிழகம் வரும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்த தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  குறிப்பாக கேரளா, மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உலக அளவில் இந்த வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை கண்டுபிடித்து, அதை மக்களுக்கு விநியோகிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மெதுவாக கட்டுக்குள் வந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் மட்டும் அது மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.  குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த வைரஸ் மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது.

 

இதனால் தற்போது டெல்லி அரசு தங்கள் மாநிலத்துக்குள் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. ஏனெனில் ஒட்டுமொத்த நாட்டின் சராசரியில் 86% தோற்று இந்த 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள டெல்லி அரசு மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி வரும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும், அவர்கள் பயணம் மேற்கொண்ட 72 மணி நேரத்துக்கு முன்பாக டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும், என தெரிவித்துள்ளது. அதாவது டெல்லிக்கு விமானம் மற்றும் ரயில் பஸ் மூலம் வரும் பயணிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் கார் மூலம் வரும் பயணிகள் இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக புதிய வழக்குகள் மகாராஷ்டிராவில் வேகமாக பரவி வருகிறது. இதனால்  அம்மாநிலத்தில் உள்ள அமராவதி மற்றும் யவத்மாலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவில் பல்வேறு வகையான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசும் புதிய வழிகாட்டு  நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது, அதாவது வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து முடிவுகளை ஆன்லைனில் பதிவிட வேண்டும், சோதனை முடிவை www newdelhiairport.in என்ற இணையதளத்தில் அப்லோட் செய்து இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

அதேபோல வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கும் அறிகுறி இருப்பின் கொரோனா பரிசோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கேரளம், மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், ஒரே தெருவில் மூன்று வீடுகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 14 நாட்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

click me!