வாட்ஸ்அப்ப நம்பி... வசனம் எழுதி... வாங்கிக் கட்டி... மெர்சலான விஜய்!

First Published Oct 21, 2017, 6:05 PM IST
Highlights
copy paste story scenes hit mersal team in social medias


எந்த நேரத்தில் படத்தின் பெயரை மெர்சல் என்று வைத்தார்களோ... வைத்தது முதல் பிரச்னைதான்! நான் மெர்சலாயிட்டேன் என்ற பாடல் வரியில் இருந்து தலைப்பைச் சுட்டு, மெர்சலாயிட்டேன் என்று ஒருவர் வைத்த படத் தலைப்பையும் சுட்டு, படத்தில் பல காட்சிகளை ஆங்கிலத் திரைப்படங்களில் இருந்து சுட்டு, திரைக்கதையில் சில காட்சிகளை ஏற்கெனவே வெளியான தமிழ்ப் படங்களில் இருந்தே சுட்டு, கடைசியில் சில வசனங்களை எந்த நம்பகத் தன்மையும் இல்லாத வாட்ஸ்அப் பார்வர்ட்களில் இருந்து சுட்டு... இப்போது மெர்சலாகிக் கிடக்கிறார் விஜய். 

 

வாட்ஸ்அப்களில் பலவிதமான பொய்கள் ரவுண்டு கட்டி அடிக்கப்படுவது சகஜம்தான். ஆனால் அவை எல்லாமே படிப்பவரை திடுக்கிடச் செய்து, உணர்ச்சிகளை தூண்டும் விதமாய் அமைந்து விடுபவை. அவற்றைப் படிக்கும் பலரும் அதன் நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை எதுவும் உணராமல், அவற்றை அப்படியே ஃபார்வர்ட் செய்து மற்றவரையும் திகிலூட்டிவிடுவார்கள். அவற்றை பொதுமக்களும் அதிகம் விரும்பி வரவேற்று, மற்றவரிடம் அதுகுறித்துப் பேசுவார்கள்.

இப்படி வாட்ஸ்அப் சுற்றல் தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு திரைக்கதை வசனம் எல்லாம் எழுதினால்..!  அதனை செய்து காட்டி இப்போது மெர்சலாகியுள்ளார் விஜய். 

தீபாவளிக்கு ரிலீஸான மெர்சலைப் பார்த்துவிட்டு, பலரும் படமே காப்பி பேஸ்ட் ரகம்தான் என்றவாறு கருத்து கூறியிருந்தனர். அதனை தனது டிவிட்டர் பதிவில் ‘இந்த ஆண்டின் சிறந்த COPY & PASTE நிபுணர் யாரு’ என்று கேட்டு நக்கல் அடித்திருந்தார் நடிகர் எஸ்.வி.சேகர். 

 

சமூக வலைத்தளங்களில், உண்மைக்குப் புறம்பான வசனங்களை பலரும் பார்க்கும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார் விஜய் என்று கூறி பாஜக., தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜக., எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரே காரணத்தாலேயே பலரும் மெர்சலுக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவாகக் களம் இறங்கி விட்டனர். அந்த வகையில் மெர்சலுக்கான ஆதரவு, பாஜக., எதிர்ப்பின் ஒரு கட்டாய அம்சம் ஆகிப் போனது. 

இப்போது, படத்தின் ஓரிரு காட்சிகள், பொதுமக்களிடம் தவறான வகையில் மெசேஜ் கொண்டு சேர்ப்பதாகக் கூறி, அதனை தணிக்கை செய்தவர்கள் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். எனவே, அதில் வரும் தவறான காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோருகின்றனர் பாஜக.,வினர். ஆனால், அதனை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று கோருவதாகக் கருதி, அவ்வாறெல்லாம் ஒருமுறை செய்யப்பட்ட படத்துக்கு மறு தணிக்கை செய்ய இயலாது என்று கூறுகின்றனர் இன்னொரு தரப்பினர். 

அடுத்து கருத்து சுதந்திரம் பிரதானமாகப் பேசப்பட, முன்னர் நடந்த விஸ்வரூபம் பட பிரச்னையில் இருந்து வரிசையாக திரைப்படங்களுக்கு நேர்ந்த பிரச்னைகளை சமூகத் தளங்களில் விவாதித்து வருகிறார்கள் பலர். 

இந்த நிலையில், மறு தணிக்கை என்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், மறு தணிக்கை செய்வதை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம் என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தனது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஒரு படத்தை தணிக்கை செய்த பிறகு, அதில் இடம்பெறும் காட்சிகளை நீக்கச் சொல்வது தவறானது என்று கூறுகின்றனர் தயாரிப்பாளர்கள்! 

எப்படியோ, தீபாவளிக்கு ஹாட்டாக வந்து, இப்போது ஹாட் டாபிக் ஆகி, தமிழக அரசியலையே ஹாட்டஸ்ட் ஆக மாற்றி மெர்சலாகியிருக்கிறது விஜய்-இன் மெர்சல்!

click me!