
நாட்டையே உலுக்கிய போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விசாரணை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்ளத்தில் சிறப்பு மனுத் தாக்கல் செய்ய சி.பி.ஐ. அமைப்பு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட இந்துஜா சகோதரர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து இப்போது சி.பி.ஐ. விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோர உள்ளது.
கடந்த 1986–ம் ஆண்டு, காங்கிஸ் தலைமையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில், போபர்ஸ் என்ற சுவீடன் நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகள் வாங்கப்பட்டன. அந்த பேரத்தையொட்டி, இந்தியாவை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கு போபர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாகவும், லஞ்சப்பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இந்திய அரசியலையே புரட்டிப்போட்டது.
கடந்த 2004–ம் ஆண்டு பிப்ரவரி 4–ந் தேதி, டெல்லி உயர் நீதிமன்றம், ராஜீவ் காந்தியை வழக்கில் இருந்து விடுவித்தது. போபர்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது.
ஆனால், அடுத்த ஆண்டு (2005) மே 31–ந் தேதி, இந்துஜா சகோதரர்கள், சிறீசந்த், கோபிசந்த், பிரகாஷ்சந்த் ஆகியோருக்கும், போபர்ஸ் நிறுவனத்து எதிரான வழக்கை ரத்து செய்ய டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கை சி.பி.ஐ. கையாண்ட விதத்துக்காக கண்டனம் தெரிவித்தது. சி.பி.ஐ.யால், ரூ.250 கோடி அரசுப்பணம் வீணாகி விட்டதாகவும் கூறியது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசிடம் சி.பி.ஐ. அனுமதி கோரியது. ஆனால், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அரசு அனுமதி அளிக்கவில்லை.
12 ஆண்டுகள் கழிந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ. மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.