டெல்லியில் மோடி அடித்த விலைவாசி சிக்ஸர்!! தமிழகத்தில் குறைந்த சமையல் எண்ணைகள் விலை...

By Ganesh RamachandranFirst Published Nov 6, 2021, 1:00 PM IST
Highlights

மத்திய அரசு சமையல் எண்ணெய்கள் மீதான வரியை கணிசமாகக் குறைத்துள்ளதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் சமையல் எண்ணெய்கள் விலை 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஓராண்டாகவே சமையல் எண்ணைகள் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். இவற்றின் விலை உயர்வு அனைத்து வகையான பொருட்களின் விலைவாசியையும் உயர்த்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தான், மக்களுக்கான தீபாவளிப் பரிசாக பெட்ரோல் மீதான வரியை ரூபாய் 5 குறைத்தும், டீசல் மீதான வரியை ரூபாய் 10 குறைத்தும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விஅலை குறைப்பு தீபாவளியன்று முதல் அமலுக்கு வந்திருப்பதன் தொடர்ச்சியாக, சமையல் எண்ணெய்களின் விலை குறைப்புக்கும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. நேற்று, கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரியான 2.5 சதவீதத்தை முற்றிலும் மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும், இந்த எண்ணெய்களின் மீதான வேளாண் செஸ், கச்சா பாமாயிலுக்கு 20 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான செஸ் வரி 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சமையல் எண்ணெய்களின் விலை கணிசமாகக் குறைகிறது.

மத்திய அரசு நேற்று பிறப்பித்த உத்தரவின்படி பாமோலின் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரி 32.5 சதவீத்தில் இருந்து 17.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த வரி குறைப்பிற்கு முன்பு, அனைத்து கச்சா சமையல் எண்ணெய்கள் மீதான வேளாண் உட்கட்டமைப்பு செஸ் 20 சதவீதமாக இருந்தது. குறைக்கப்பட்ட பிறகு, கச்சா பாமாயில் மீதான செஸ் 8.25 சதவீதமாகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான செஸ் 5.5 சதவீதமாகவும் உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் ஒரு கிலோவுக்கு ரூபாய் 10 வரை சமையல் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளது. ஒரு கிலோ பாமாயிலின் விலை 7 ரூபாயும், கடலை எண்ணெயின் விலை 10 ரூபாயும் குறைந்துள்ளது. பொதுமக்களுக்கு இது ஓரளவு விலைவாசியால் ஏற்படும் சுமையைக் குறைக்கும். இனி வரும் நாட்களில் சர்சதேச சந்தை விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த விலைவாசி கட்டுப்பாட்டு முயற்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணைகளின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளதால் அனைத்து பொருட்களின் விலைகளும் குறையும் என்று எதிபார்க்கப்படுகிறது. அதே நேரம், வர்த்தக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

click me!