ஒன்றிணையக் கூப்பிட்ட மு.க.ஸ்டாலின்... விலகி நிற்கச் சொல்லும் எம்.பி... கொரோனாவையே குழப்பும் திமுக..!

By Thiraviaraj RMFirst Published Jun 24, 2020, 1:17 PM IST
Highlights

ஒன்றிணைவோம் வா என என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு  விடுத்திருந்த நிலையில் விலகி நிற்போம். மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக என திமுக எம்.பி திருச்சி சிவா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒன்றிணைவோம் வா என என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு  விடுத்திருந்த நிலையில் விலகி நிற்போம். மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக என திமுக எம்.பி திருச்சி சிவா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் கூடிக்கொண்டே போகிறது. ஏழை, பணக்காரன், பெரியவர், சிறியவர் பேதம் ஏதுமின்றி உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறையவில்லை. மனிதன் பெயரிழந்து, அடையாளம் தொலைத்து, வெறும் எண்ணிக்கையாக மட்டுமே கணக்கிடப் படுகின்ற மோசமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உரிய மருந்து ஏதும் இன்னும் எட்டப்படவில்லை. தடுப்பூசிக்கான சாத்தியம் அண்மையில் ஏதுமில்லை.

அபாயம் குறையவில்லை; அச்சம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொறுப்போடு மக்களைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து போராடுவோர் ஒருபுறம்; வயிற்றுச் சோற்றுக்கு வழியின்றி, பார்ப்பதற்கு வேலையின்றி, மனைவி, மக்களைக் காக்கும் கடமை எண்ணி கதியற்றுக் கதறும் கூட்டம் ஒருபுறம். வீட்டுக்குள் முடங்கிக் கிடப்போர் விரக்தியில் உழலும் நிலை ஒருபுறம்; இதையெல்லாம் பொருட்டாகவே கருதிடாத, பொறுப்பற்ற கூட்டம் ஒருபுறம். யாரும் தயவுசெய்து மறந்துவிட வேண்டாம். இந்தச் சூழலில் நமக்கு இருக்கும் வழிகள் மூன்றே மூன்றுதான்:
1) தனிமனித இடைவெளி
2) கட்டாயம் முகக்கவசம் அணிவது
3) கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்வது

இதைச் செய்ய மறுப்போரைக் காண நேர்கிறபோது நெஞ்சு பதைக்கிறது. இவர்களே தொற்று பரவுவதற்குப் பெரும் காரணமாய் இருப்போர். நிறையப் பேர் முகக் கவசத்தைக் கழுத்தில் அணிந்திருப்பதையே பார்க்க முடிகிறது. மெத்தப் படித்தவர்களும் இந்த வரிசையில் உண்டு. சிலர், வாங்கிக் கொடுத்தாலும் பையில் வைத்துக் கொள்கிறார்கள்.

மூச்சு முட்டுகிறது என்று சொல்வோரிடம் ஒரு சின்ன வேண்டுகோள்: நமக்காக, நம்மைப் போன்றோரின் நலன் காக்கத் தங்கள் சொந்தக் குடும்பம் மறந்து, நாள் முழுவதும் உடல் முழுக்கக் கவசமணிந்து இயற்கை உபாதையைப் பலமணி நேரம் சகித்து, பொறுத்து உழைக்கும் மருத்துவப் பணியாளர்களை , காவல் துறையினரை, தூய்மைப் பணியாளர்களை ஒரு கணநேரம் எண்ணிப் பாருங்கள்.

விளையாட்டுத்தனத்திற்கும், அசிரத்தையான போக்கிற்கும், பொறுப்பற்ற தனத்திற்கும் பணயம் வைக்கப்படுவது விலைமதிப்பற்ற மனித உயிர்கள். கடமை தவறாமல் பணியாற்றிக் கரோனாவால் உயிரிழந்த காவல்துறை ஆய்வாளர் உடலருகே அவர் மனைவியும், பெற்ற பிள்ளைகளும் சென்று காண முடியாமல் கதறிய காட்சியினைக் காணொலியில் கண்டிருப்பீர்கள்.

கரம் கூப்பி மன்றாடிக் கேட்கின்றேன். அவசியக் காரணம் தவிர்த்து வீட்டுக்கு வெளியே செல்வதைத் தவிருங்கள். அப்படியே செல்ல நேர்ந்தால் மறவாமல் வெளியே இருக்கும் நேரம் முழுவதும் முகக்கவசத்தை மூக்கு, வாய் இரண்டையும் மறைக்கும் அளவிற்குத் தயவுசெய்து அணியுங்கள். இது உங்களுக்கும், ஊரில் இருக்கும் மற்றவர் நலனிற்கும் சேர்த்துதான். உங்களை நம்பி உங்கள் குடும்பம் காத்திருக்கிறது.

‘அப்பா’ என அன்புடன் அழைத்து உங்கள் அரவணைப்புக்குக் காத்திருக்கும் பிள்ளைகள் வீட்டில் இருக்கிறார்கள். இதையெல்லாம் மறந்து பொறுப்பற்று நடந்து கொண்டால், நோயைத் தொற்றிக் கொண்டு பிறருக்கும் பரப்பிடும் பாதகத்திற்குத் துணை போன பழி வந்து சேரும். மறவாதீர். இரக்கமற்ற கொடும் நோயோடு தீர்வு தெரியாத சூழலில், போராடும் உலகில் உங்கள் கடமை இது ஒன்று மட்டுமே என்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்.

விலகி நிற்போம். மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக!’’ எனக் கேடுக்கொண்டுள்ளார். இது திமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைமை ஒன்றிணைவோம்வா என்கிற திட்டத்தை ஆரம்பித்த நிலையில், திருச்சி சிவா விலகி நிற்போம் எனக் கூறியுள்ளது முரண்பாடாக இருக்கிறது என்கிறார்கள். 

click me!