
சென்னையில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழந்துள்ளது. சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சியினர் உள்ளிட்டோர் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரணம் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் தேங்கியிருக்கும் மழைநீரில் அண்ணாமலை படகில் சென்று ஆய்வு செய்தார். அந்தப் பகுதிகளை ஆய்வு செய்த அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏவாக இருக்கும் கொளத்தூர் தொகுதியின் தெருக்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. பெரும்பாலான மக்களின் வீடுகளில் மின்சாரம் இல்லை. பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வாக உள்ளது’ என்று குற்றம்சாட்டினார்.
அண்ணாமலை, கரு.நாகராஜனுடன் இணைந்து படகில் சென்றார். படகு பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக அவர் படகில் உட்கார்ந்திருப்பது போன்ற வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அப்போது அண்ணாமலைக்கு அருகில் பலரும் சாலையில் நிற்கின்றனர். அவர்களுக்கு முட்டி அளவு கூட தண்ணீர் இல்லை. எனவே, முட்டி அளவு தண்ணீர் இல்லாத இடத்தில் அண்ணாமலை படகில் சென்று பரபரப்பை ஏற்படுத்துகிறார் என்று நெட்டிசன்கள் கேலி செய்தனர். அந்தப் படகுப் பயண வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் எம்.பி.,யும், விசிக தலைவருமான திருமாவளவன் தனது கால்கள் நனையாமல் இருக்க சேர்களை வரிசையாக அடுக்கி அதன் மீது நடந்து வந்து காரில் ஏறிச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் அண்ணாமலையை கேலி செய்தவர்கள் இப்போது திருமாவளவனை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.
இவர்தான் வானத்து இந்திரரோ. அந்தச் சேர் எடுத்துப்போடுபவரும் அவர் மாதிரியான மனிதர்தானே. இது என்ன புதுவகையான ஆதிக்க சகதி என பலரும் கடுப்பாகி வருகின்றனர்.