இந்தி மொழி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சை பேசிய திமுக எம்பி செந்தில்குமாரை கடுமையாக கண்டித்துள்ளார் திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது மக்களவையில் பேசிய திமுக எம்பி செந்தில்குமார், "யூனியன் பிரதேசங்கள் தங்களை மாநிலமாக்க எதிர்பார்ப்பது தான் வழக்கம். ஆனால், முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாகியிருக்கிறது. பாஜக பல மாநிலத் தேர்தல்களில் வென்றிருக்கிறது.
எப்போது அவர்களால் வெல்லமுடியவில்லையோ அந்த மாநிலத்தை அவர்கள் யூனியன் பிரதேசமாக்கிவிடுகிறார்கள். அங்கே ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்துகிறார்கள். எங்கே அவர்களது வெற்றி உறுதி செய்யப்படுகிறதோ அங்கே அவர்கள் அதை செய்வதில்லை” என்று கூறினார் திமுக எம்பி செந்தில்குமார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த நாட்டின் மக்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். பாஜக வெற்றிபெறுவதெல்லாம் நாங்கள் மாட்டு மூத்திர மாநிலங்கள் என்று குறிப்பிடும் ஹிந்தி மாநிலங்களின் இதயப்பகுதியில்தான். பாஜகவால் தென்னிந்திய மாநிலங்களில் வெற்றிபெற முடியாது. பாஜகவால் தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியாது.
தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் அவர்களுக்கு கிடைத்த முடிவுகளைப் பாருங்கள். நாங்கள் அங்கே மிகவும் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார் திமுக எம்பி செந்தில்குமார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
திமுக எம்பி செந்தில்குமாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்பியின் பேச்சை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கண்டித்துள்ளனர். வட மாநிலங்கள் ‘கோ மூத்திர மாநிலங்கள்’ எனக் கூறிய விவகாரத்தில் வெளிப்படையாக மன்னிப்பு கேட்பதாக தருமபுரி எம்.பி செந்தில்குமார் ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில், திமுக எம்பி செந்தில் குமாரை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார்.
இதனை அறிந்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார். செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில், "முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.
எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்." என்று சொல்லி இருக்கிறார். பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டிய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்சினைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா