குஜராத், ஹிமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்.. காங்கிரஸை கதறவிடும் பிரசாந்த் கிஷோர்!

By Asianet TamilFirst Published May 20, 2022, 9:08 PM IST
Highlights

இந்த ஆண்டு குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் கட்சித் தொடங்கியது. கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தைக் கூட்டி சில முடிவுகளை காங்கிரஸ் கட்சி எடுத்தது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைக்க காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேருவதற்கான வாய்ப்புகள் குறித்து அவரிடம் ஆலோசிக்கப்பட்டது. கட்சியில் அதிகாரம் அளிக்கும் செயற் குழுவில் பிரசாந்த் கிஷோர் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் காங்கிரஸின் தேர்தலுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் காங்கிரஸ் பிரசாந்திடம் கேட்டுகொண்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சி வழங்க முன் வந்த நிபந்தனையுடன் கூடிய வாய்ப்பை பிரசாந்த் கிஷோர் ஏற்க மறுத்தார். மேலும் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் தெலங்கானா ,ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு தேர்தல் வியூக பணியை பிரசாந்த் கிஷோர் ஏற்றுக்கொண்டார். இதனால், காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் சேருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் அண்மையில் ராஜஸ்தான மாநிலம் உதய்ப்பூரில் நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தில் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல், கட்சியைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்த கூட்டம் பற்றி தற்போது பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் ஒரு தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில், “உதய்பூரில் நடந்து முடிந்த காங்கிரசின் சிந்தனை அமர்வு கூட்டம் பற்றிய உங்களது கருத்துகளை கூறுங்கள் என தொடர்ந்து என்னிடம் கேட்கிறீர்கள். என்னுடைய பார்வையில், வர உள்ள குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி வரை, காங்கிரஸ் தலைமைக்கு சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போதுள்ள நிலைமையே நீடிப்பது ஆகியவை தவிர அர்த்தமுள்ள எதனையும் சாதிக்க இந்தக் கூட்டம் தவறி விட்டது. இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவும்” என்று பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்தக் கருத்து காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!