ஸ்டாலினை முதல்வராக்குவோம்.. கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுவுக்கு காங்கிரஸ் உதவும்..!

By vinoth kumarFirst Published Nov 17, 2020, 12:23 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக முதலமைச்சராக அமர வைக்கக் காங்கிரஸ் பணியாற்றும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக முதலமைச்சராக அமர வைக்கக் காங்கிரஸ் பணியாற்றும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார். 

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு என்ன என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதில்,  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டதோ, அதில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் 3 தொகுதிகள் வீதம் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. 

அதன்படி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டதால், அக்கட்சிக்கு 27 தொகுதிகள், 2 எம்.பி.  தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகள்,  1 எம்.பி. தொகுதியில் போட்டியிட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிக் லீக், இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 3 தொகுதிகள் வீதம் 9 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் என பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியல்படி கூட்டணி கட்சிகள் 63 தொகுதிகள் என்றும், திமுக 171 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையால் காங்கிரஸ் கடும் அதிர்ச்சியடைந்தது. 

இந்நிலையில், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு தினேஷ் குண்டுராவ் பேட்டியளிக்கையில்;- திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்துக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளைக் கட்சி தொடங்கியுள்ளது. வலுவான மற்றும் நல்ல வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் தொடங்கியிருக்கிறது. நாங்கள் அதை முக்கியமான, நடைமுறை கோணத்தில் பார்க்கிறோம். தொகுதிவாரியாக உள்ள எதார்த்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்ற விசயங்களைவிடக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். 

பீகார் தேர்தல் முடிவுகள் எங்களைப் பாதிக்காது. தமிழகத்தின் அரசியல் களம் வேறு. திமுகவுடனான எங்கள் கூட்டணி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதைப் போல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவோம். பீகாரில் மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. களத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு, மக்களின் ஏகோபித்த ஆதரவையும் எங்கள் கூட்டணி பெற்றது. அதேபோன்ற மக்கள் ஆதரவு இனியும் தொடரும். 

வாக்கு வித்தியாசம் குறையும் போது திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வலுவூட்டக் காங்கிரஸ் கட்சியால் முடியும். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம். எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதிப் பங்கீடு நடக்கும். நேர்மையான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் தோழமைக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம். தேவையற்ற பேரங்கள் இருக்காது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக முதலமைச்சராக அமர வைக்கக் காங்கிரஸ் பணியாற்றும். தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

click me!