இந்திய-சீன எல்லை விவகாரத்தில் மோடி தலையிட வேண்டும்..!! இந்த நேரத்தில் சண்டை கூடாது: தமிழக எம்.பி அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 6, 2020, 4:43 PM IST
Highlights

இரு நாடுகளும் தொழில் முன்னேறுவதற்கு பாடுபட வேண்டுமே தவிர எல்லைப் பிரச்சனையில் ஈடுபட்டு 2 நாடும் சிக்கலில் மாட்டக்கூடாது. அதற்கு நமது இந்தியா பிரதமர் உடனடியாக முன் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை பிரதமர் மோடி தலையிட்டு பேசித் தீர்க்க வேண்டும் என  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்  முன்னணி தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். இந்திய-சீன எல்லையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் பதற்றம் நீடித்து வருகிறது, மே-5 ஆம் தேதி பாங்கொங் த்சோ பகுதிகள் இந்தியா,சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில்  சீனா தனது படைகளைக் குவித்து வருகிறது, இந்நிலையில் அதற்கு எதிர் நடவடிக்கையாக இந்தியாவும் படைகளை குவித்து சீனாவை கண்காணித்து வருகிறது. இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பது தொடர்பாக கடந்த 25 நாட்களுக்கும் மேலாக ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன ஆனால் அதில்  உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை, இந்நிலையில் இரு நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார், அதன் முழு விவரம்:-  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, சீனா இந்தியாவிற்குள் ஊடுருவி விட்டது என்ற நிலையில் நாம் இப்பொழுது இருந்து கொண்டிருக்கிறோம், எனவே உடனடியாக பேச்சுவார்த்தையில் மூலமாகத்தான் அதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.  இப்பொழுது சீனாவுடன் நமது இந்திய ராணுவ தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள், பிரதமர் அவர்களும் பேசி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எல்லையில் 45 கிலோமீட்டர் ரோடு போடுவதெல்லாம் இந்த காலகட்டத்தில் மிகவும் சிரமமான காரியம், எனவே பேச்சுவார்த்தை நடத்தி இந்த பதற்றத்தை தணித்து இரு நாடுகளும் தொழில் முன்னேறுவதற்கு பாடுபட வேண்டுமே தவிர எல்லைப் பிரச்சனையில் ஈடுபட்டு 2 நாடும் சிக்கலில் மாட்டக்கூடாது. அதற்கு நமது இந்தியா பிரதமர் உடனடியாக முன் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இந்தியாவில் கொரோனா தாக்கப்பட்டதில் இருந்து பொருளாதாரம் சரியாக இல்லாத காரணத்தினால், அதிக தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. அதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர், வேலை வாய்ப்பு இல்லை என்று சொன்னால் ஒரு நாட்டின் பொருளாதாரம் உயராது, எனவே மத்திய மாநில அரசுகள் எத்தனை தொழிற்சாலைகள் மூடி இருக்கின்றன, எப்பொழுது மூடப்பட்டன என்ற  கணக்கு எடுத்து அவைகள் இயங்குவதற்கு ஏற்ப பொருளாதார உதவியை  செய்து அந்த தொழிற்சாலைகளை இயக்க வேண்டும், இல்லை என்று சொன்னால் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி மக்கள் பீதியுடன் வாழ ஆரம்பித்துவிடுவார்கள். எனவே தமிழக அரசும் மத்திய அரசும் உரிய வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும், வேலை செய்கின்ற தொழிலாளர்களும் எங்கே வேலை செய்கின்றார்களோ அங்கே கவனமாக இருந்து வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் இல்லை, அதனால் தொழிற்சாலைகள் இல்லை, தொழிற்சாலைகள் இல்லை, அதனால் வேலை இல்லை என்ற நிலையை மாற்ற அரசு முழு கவனத்துடன் அதில் ஈடுபட்டு தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!