ராஜஸ்தான் ஆளுநர் ஜனநாயகப் படுகொலை... தமிழக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Jul 26, 2020, 8:50 PM IST
Highlights

ராஜஸ்தான் ஆளுநருக்கு எதிராக தமிழக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டாம் நடத்தப்போவதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சச்சின் பைலட்டும், அவருடைய ஆதரவு அமைச்சர்கள் இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். சச்சின் பைலட் தலைமையில் 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 102 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகக் கூறி, அதை நிரூபிக்க தயார் என்றும் அசோக் கெலாட் கூறிவருகிறார். ஆனால், சட்டப்பேரவையைக் கூட்ட ராஜஸ்தான் ஆளுநர் மறுத்துவருவதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் ராஜஸ்தான் ஆளுநருக்கு எதிராக தமிழக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டாம் நடத்தப்போவதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்காக அந்த மாநில ஆளுநர் மூலமாக பாஜக முயற்சி செய்கிறது. ராஜஸ்தானில் பாஜக நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு முன்பாக நாளை (27.07.2020) காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்கள் கே. ஜெயக்குமார் எம்.பி, எச்.வசந்தகுமார் எம்.பி, கே. விஷ்ணுபிரசாத் எம்.பி, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ். திரவியம், சிவ.ராஜசேகரன், கே. வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

click me!