நகர்ப்புற உள்ளாட்சி மறைமுக தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவினரே கைப்பற்றியுள்ள நிலையில் திமுகவை கண்டித்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு பதவி பங்கீடப்பட்டு ஒதுக்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு அந்த பதவி இடங்களை கைப்பற்றினர். இதன் காரணமாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் கடும் அதிருப்தி அடைந்ததனர். இந்த விஷயத்தில் திமுக தலைமை உடனடி நடவடிக்கை எடுக்கும் படி கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியது. இதனையடுத்து திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் உடனடியாக கூட்டணி கட்சிகளுக்கு எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால்பெரும்பாலான திமுகவினர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முடியாது என கூறிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைமை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்லிநகரம், நெல்லிகுப்பம்,காங்கேயம், பொன்னேரி,மீஞ்சூர்,பெ.மல்லாபுரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கூட்டணி கட்சியை எதிர்த்து போட்டியிட்டவர்கள் ராஜினாமா செய்ய மாட்டோம் என பிடிவாதமாக உள்ளனர். இதனால் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியது. மறைமுக தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட செல்வமேரி அருள்ராஜ்க்கு எதிராக திமுக நகர செயலாளர் சதீஷ் குமாரின் மனைவி சாந்தி போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செல்வ மேரி வெறும் 4 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனையடுத்து திமுகவினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டும் திமுகவினர் ராஜினாமா செய்யவில்லை. இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக கைப்பற்றியுள்ள பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், தலைவர் பதவியை கைப்பற்ற ஒத்துழைத்த திமுக ஒன்றிய செயலாளர் கோபால், ஒன்றிய சேர்மன் கருணாநிதி ஆகியோருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி பெற்ற நிலையில் தங்களை பதவி விலக கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.