
அதிமுக தொடர் தோல்வி காரணமாக சசிகலா மீண்டும் அதிமுகவிற்கு வர வேண்டும் என ஒரு சில மாவட்டங்களில் அதிமுகவினர் குரல் எழுப்பியுள்ள நிலையில் அதிமுக தலைமை இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காதது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தான் சந்தித்த 4 தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இது அதிமுக தொண்டர்களிடம் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இரட்டை தலைமையால் தான் தொடர் தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் தேவை என கூறிவருகின்றனர். இதற்கு சசிகலா தான் சரியான தேர்வாக இருக்கும் என அதிமுக ஒரு சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஏற்றார்போல் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுவினர் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு மெளனமாக இருந்த அதிமுக தலைமை, சசிகலாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சசிகலா அதிமுகவில் இணைப்பது தொடர்பான கேள்விக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அதிமுக ராணுவ கட்டுப்பாட்டோடு உள்ளதாகவும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதால் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறினார். இதே போல சசிகலாவை சந்தித்ததால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கட்டுப்பாடு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கி கொடுத்த கட்டுப்பாடுகளோடு அதிமுக தொடருவதற்கு எடுத்துக்காட்டாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் தேனி மாவட்ட நிர்வாகிகள் நடத்திய கூட்டத்திற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று தெரிவித்தவர், சசிகலாவை, ஓ.பன்னீர் செல்வம் என்றைக்கும் ஏற்றுக்கொண்டதில்லையென கூறினார். சசிகலா தனக்கு மிகப்பெரிய எதிரியாக கருதியது ஓ.பன்னீர் செல்வத்தை தான் எனவும் திட்டவட்டமாக பொன்னையன் தெரிவித்தார்.
சசிகலா ஒரு பூஜ்யம் என்றும் அவரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லையென்று தெரிவித்தவர், ஜெயலலிதா மறைவிற்கு காரணமே சசிகலா தான் என குற்றச்சாட்டு எழுந்ததால் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார். எனவே சசிகலாவை அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு ஏற்றுக்கொள்ளவில்லையென கூறினார். இதே போல ஓபிஎஸ்- ஈபிஎஸ்ம் சசிகலாவை அறவே ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் தெரிவித்தார். எனவே சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைவார் என்ற ஒரு சில தொண்டர்களின் எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பாகவே இருந்து விடும் என்றே தெரிகிறது. அதே நேரத்தில் அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை,நிரந்தர விரோதியும் இல்லையென கூறுவார்கள் அது போலத்தான் சசிகலா விவகாரத்தில் எதிர்காலத்தில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்