பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறதா ? என்று கேட்டதாகவும், அதற்கு கலேல்கர் இல்லை என்று கூறியதும் இந்த அறிக்கையை குப்பைக் கூடையில் தூக்கி எறியுங்கள் என்று பண்டித நேரு கூறியதாகவும், ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை ராமதாஸ் கூறியிருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ராமதாசுக்கு எதிராக தீர்மானம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில், தமிழக ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் செயலுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமாக இட ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில், இந்தியாவிலேயே சமூகநீதிக்காக குரல் கொடுப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நீண்ட நெடுங்காலமாக நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டிற்கு அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தவுடனேயே ஆபத்து நேர்ந்த போது, அதற்காக முதல் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்
இதன்மூலம் தமிழகம் அனுபவித்து வந்த இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டு, சமூகநீதி நிலைநாட்டப்பட்டது. இதற்காக தந்தை பெரியார் குரல் கொடுத்து போராடியதையும், முதல் திருத்தம் கொண்டு வர மூலவராக இருந்து செயல்பட்ட பெருந்தலைவர் காமராஜரையும், திருத்தத்தை நிறைவேற்றிய பிரதமர் நேருவையும் தமிழக மக்கள் என்றைக்கும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூறுவார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு கூட்டம் ஒன்றில்,
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் பேசும் போது, முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் காகா. கலேல்கர் முதல் பிரதமர் பண்டித நேருவிடம் அறிக்கையை 1954 இல் சமர்ப்பித்த போது, இதில் பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறதா ? என்று கேட்டதாகவும், அதற்கு கலேல்கர் இல்லை என்று கூறியதும் இந்த அறிக்கையை குப்பைக் கூடையில் தூக்கி எறியுங்கள் என்று பண்டித நேரு கூறியதாகவும், ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறியிருக்கிறார்.
கண்டன தீர்மானம்
இந்த கூற்றுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும். இதற்கான ஆதாரத்தை அவர் வெளியிடுவாரா ? முதல் திருத்தம் கொண்டு வந்து சமூக நீதியை காப்பாற்றிய பண்டித நேருவை பழிப்பது முறையாக இருக்காது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் ஆதாரமற்ற இத்தகைய உள்நோக்கம் கொண்ட அவதூறு கருத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
என்னய்யா நடக்குது கட்சிக்குள்ள... தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டம் குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி