
பாஜகவை ஆட்சியமைக்க விடாமல் தடுக்க, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் ஆர்.கே.நகர் மற்றும் ஜெயாநகர் தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 40 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தது. பிறகு காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய கட்சிகள் முன்னிலை வகிக்கும் இடங்களை கூட்டி வருவதை விட அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகித்தது.
தனிப்பெரும்பான்மையாக பாஜக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேரம் ஆக ஆக காங்கிரஸ் மற்றும் மஜத சில தொகுதிகளில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தன. பாஜக 106 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 73 தொகுதிகளிலும் மஜத 41 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவை இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனி பெரும்பான்மையை எட்டவில்லை. அதனாப் பாஜகவை ஆட்சியமைக்க விடாமல் தடுக்கும் வகையில், தேவெ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கட்சி பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய இரண்டு கட்சிகளும் 114 இடங்களை பெற்றுள்ளன. எனவே இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை உள்ளதால், மஜத தலைவர் தேவெ கௌடாவுடன் காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஜத மாநில தலைவர் குமாரசாமியை முதல்வராக்க வேண்டும் என்ற நிபந்தனை மஜத சார்பில் வைக்கப்படுவதாகவும் அதை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.