காங்கிரஸ் புதிய தலைவர் ராகுலா அல்லது பிரியங்காவா..? காங்கிரஸ் காரிய கமிட்டியில் இன்று ஆலோசனை.?

By Asianet TamilFirst Published Oct 16, 2021, 9:30 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
 

2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். இதனையடுத்து சோனியா காந்தி இடைக்கால தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவருடைய உடல்நிலை காரணமாக, அவரால் தீவிரமாக கட்சி பணியாற்ற முடியவில்லை. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் நிரந்தர தலைவர் நியமிக்கப்படாமலேயே உள்ளது. கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதினர்.
இதனால், இவர்கள் கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பங்களும் பதவிச் சண்டையும் வெளிப்படுகின்றன. அண்மையில் பஞ்சாபில் நடந்த குழப்பங்கள், அக்கட்சி மிக பலவீனமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. இதனையடுத்து அக்டோபர் 16 அன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்திருந்தார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, திட்டமிட்டப்படி காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இன்று இணைய வழியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் திட்டமிட்டப்படி  நடக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. புதிய தலைவர் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ராகுல் காந்தியை மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்கும்படி வலியுறுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தயாராகிவருகின்றனர். ராகுல் காந்தி மறுக்கும்பட்சத்தில் பிரியங்காவை தலைவராக்க நியமிக்க வலியுறுத்தவும் சில தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

click me!