
தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. மறைந்த ஜெயலலிதா அறிவித்த பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என்று பேசியதாக செய்திகள் வெளியானது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சை விமர்சித்து இணையதளங்களிலும் கடும் விமர்சனங்களை, நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சு குறித்து, காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதில், தமிழகத்தில் வசிக்கும் குடிமக்கள் அரசு திட்டங்களைப் பெற அதிமுக உறுப்பினராக இருக்க வேண்டும் என அதே கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கூறுகிறார்.
இது மிகவும் கடுமையானது; இதுபோன்று முட்டாள்தனமாக பேசி எதிர்ப்பை சந்திப்பார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இவர்கள் இந்த மாநிலத்தை ஆள்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது பரிதாபமே. இதற்கான பாடம் உங்களுக்கு விரைவில் புகட்டப்படும் என்று குஷ்பு டுவிட்டரில் கூறியுள்ளார்.