புரட்சியும் இல்லை… வெடிக்கவும் இல்லை.. சசிகலா அரசியல் பிரவேசத்தை கலாய்த்து தள்ளிய கே.எஸ்.அழகிரி.!

By manimegalai aFirst Published Oct 26, 2021, 5:18 PM IST
Highlights

தமிழ்நாடு அரசியலில் இதுபோன்ற மாற்றங்கள் வருவது மிகவும் அரிதான ஒன்றாகும். சசிகலா ஒன்றும் பெரிய தலைவர் அல்ல என்றும் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசியலில் இதுபோன்ற மாற்றங்கள் வருவது மிகவும் அரிதான ஒன்றாகும். சசிகலா ஒன்றும் பெரிய தலைவர் அல்ல என்றும் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

அதிமுக-வை கைப்பற்றும் வேலைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ள வி.கே.சசிகலா அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். நான்கரை வருடங்களுக்கு பின்னர் ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா, எம்.ஜி.ஆர். வீட்டிற்கெ சென்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்ற கல்வெட்டையும் திறந்துவைத்து தமது நிலைப்பாட்டை உறுதிபட தெரிவித்துவிட்டார். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வெளிப்படையாக அவர் விட்ட தூதை எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்க மறுத்துவிட்டது.

சசிகலாவை தரக்குறைவாக எடப்பாடி விமர்சித்ததை மறைமுகமாக கண்டித்துள்ள பன்னீர்செல்வம், தமது விஸ்வாசம் சசிகலாவுக்கு உண்டு என்பது போல் பேசி வருகிறார். பன்னீர்செல்வத்தின் பேச்சு அதிமுக-வில் புயலை கிளப்பியுள்ள நிலையில் தமது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக-வில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த ஒரு வார காலம் அரசியல் சுற்றுப்பயணத்தையும் சசிகலா தொடங்கிவிட்டார்.

சசிகலாவின் நோக்கம் நிறைவேறுமா என்பது அதிமுக-வினருக்கே புரியாத புதிராக இருக்கும் நிலையில் அரசியல் விமசர்கர்கள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அதிமுக-வை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் முடிவு காலம் கடந்த முயற்சி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஏற்கெனவே கூறியிருந்தார். அதிமுக நிச்சயம் சசிகலாவின் தலைமையின் கீழ்தான் வரும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் சசிகலாவின் அரசியல் பிரவேசம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி, கிண்டல் செய்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா விடுதலை ஆனவுடன் பெரிய புரட்சி நடக்கும் என சொன்னார்கள். ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்தால் தமிழகமே வெடித்து சிதறும் என்றும் சொன்னார்கள். ஆனால் இந்த இரண்டுமே நடக்கவில்லை. ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா சென்றபோது ஆயிரம் பேர் மட்டுமே கூடியிருந்தார்கள். தமிழ்நாடு அரசியலில் இது போன்ற மாற்றங்கள் வருவது மிகவும் குறைவு. சசிகலா ஒரு இயக்கத்தின் தலைவர் மட்டுமே மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் தலைவர் கிடையாது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அவரது கருத்து அமமுக தொண்டர்கள் மற்றும் சசிகலா ஆதரவாளர்களை கோபமடையச் செய்துள்ளது.

click me!