ஏக்கருக்கு 8 ஆயிரம் பத்துமாங்க..? 40 ஆயிரம் கொடுங்க... எடப்பாடியாருக்கு கே.எஸ். அழகிரி வைத்த டிமாண்ட்..!

By Asianet TamilFirst Published Jan 18, 2021, 9:56 PM IST
Highlights

விவசாயிகளின் நஷ்டத்தை மதிப்பீடு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் பெய்த கடும் மழையினால் தமிழகத்தில் பரவலாக அறுவடை நிலையில் இருந்த நெற்பயிர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலையில் சேற்றிலும், சகதியிலும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அறுவடை எந்திரங்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் பயிர்கள் அழுகி, நாசமாகி விட்டன. பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய விவசாயிகள் கனமழையின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்பினால் சொல்லொனா துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களில் கடுமையான கனமழையின் காரணமாக திறந்து விடப்பட்ட அணைகளின் மூலம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதைத் தவிர, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்களின் சகஜ வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக, கனமழை பெய்கிற காலங்களில் ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்வது வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால், சமீபகாலமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களை சேமிக்க கிடங்கு வசதி இல்லாத காரணத்தால் மழையில் நனைந்து பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. விவசாயிகளிடமிருந்து ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து ஈரப்பதமுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
கடும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக வழங்க தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது யானைப் பசிக்கு சோளப் பொரி வழங்குவதற்கு ஒப்பாகும். விவசாயிகளின் நஷ்டத்தை மதிப்பீடு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, தமிழகத்தில் கனமழையால் 14 மாவட்டங்களுக்கு மேல் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளன. போர்க்கால அடிப்படையில் விவசாயிகளின் பாதிப்பை வருவாய்த்துறை மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் மூலம் மதிப்பீடு செய்து இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.” என்று கே.எஸ். அழகிரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

click me!