காங்கிரஸில் வெடித்தது உட்கட்சி பூசல்... விஜயதாரணிக்கு எதிராக போர்க்கொடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 15, 2021, 11:28 AM IST
Highlights

 விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று வரை காங்கிரஸ் அறிவிக்காததற்கு அக்கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. 

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. காங்கிரஸ் போட்டியிட உள்ள தொகுதிகள் எவை என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே உட்கட்சி பூசலும் வெடிக்க ஆரம்பித்தது. கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்குவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் எம்.பி. விஷ்ணு பிரசாத், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜான்சிராணி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆகியோர் வெளியிட்ட ட்வீட்கள் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிக் குழப்பம் இருப்பதை உறுதிப்படுத்தியது. அத்தனை பிரச்சனைகளுக்கு நடுவிலும் முதற்கட்டமாக 21 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. 

அதன்படி பொன்னேரி (தனி) - துரை சந்திரசேகர், ஊத்தங்கரை - ஜே.எஸ்.ஆறுமுகம்,ஸ்ரீபெரும்புதூர் (தனி)- கே.செல்வப்பெருந்தகை', சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்தினம், கள்ளக்குறிச்சி (தனி) - கே.ஐ.மணிரத்னம்,ஓமலூர் - ஆர்.மோகன் குமாரமங்கலம்,ஈரோடு கிழக்கு - திருமகன் ஈவேரா,உதகமண்டலம் - ஆர்.கணேஷ், கோவை தெற்கு - மயூரா எஸ்.ஜெயக்குமார் உடுமலைப்பேட்டை - கே.தென்னரசு, விருத்தாசலம் - எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன், காரைக்குடி - எஸ்.மாங்குடி, மேலூர் - டி.ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - பி.எஸ்.டபிள்யூ மாதவராவ், சிவகாசி - ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன், திருவாடனை - ஆர்.எம்.கருமாணிக்கம்,  ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் , தென்காசி - எஸ்.பழனி நாடார், , நாங்குநேரி - ரூபி ஆர்.மனோகரன், கிளியூர் - எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிட உள்ளது உறுதியானது. 


ஆனால் விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று வரை காங்கிரஸ் அறிவிக்காததற்கு அக்கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. விளவங்கோட்டில் விஜயதாரணி, குளச்சலில் பிரின்ஸ் ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சீட் வழங்க கூடாது என காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தனக்கு சீட் கிடைக்காததால் கொதிப்படைந்த விஜயதாரணி டெல்லி புறப்பட தயாரானதாகவும், அவரை தடுத்து நிறுத்து தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழக காங்கிரஸ் தலைமை பேசி தீர்த்து கொள்ளலாம் என சமாதானம் செய்ததாக தெரிகிறது. உட்கட்சி பூசல் அதிகரித்ததால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!