வெறுப்பாக ஒதுக்கி திடீர் விருப்பம் காட்டும் காங்கிரஸ்... பாஜக அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published Apr 12, 2019, 5:06 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்று காங்கிரஸ் கட்சி  அதிரடியாக அறிவித்துள்ளது. 
 

மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்று காங்கிரஸ் கட்சி  அதிரடியாக அறிவித்துள்ளது. 

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. டெல்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் வரும் மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டது முதல் ஆம் ஆத்மி-காங்கிரஸுக்கு இடையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இடையில், பலமுறை முறிந்த பேச்சுவார்த்தை ஏதோ சில காரணங்களால் மீண்டும், மீண்டும் தொடர்ந்தது. 

இதற்கு டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆண்ட காங்கிரஸிடம் இருந்து அதை ஆம் ஆத்மி பறித்தது காரணமானது. அருகிலுள்ள அரியானா, பஞ்சாப் மற்றும் கோவாவிலும் ஆம் ஆத்மியின் வளர்ச்சி காங்கிரஸுக்குப் பாதிப்பை ஏற்படுத்தின. மக்களவையில் கூட்டணி ஏற்பட்டால், சட்டப்பேரவையில் எதிர்த்துப் போட்டியிட முடியாது என காங்கிரஸின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் எதிர்ப்பு தெரிவித்தார். இவரையும் சமாளித்த ராகுல், டெல்லி காங்கிரஸ் தொண்டர்களிடம் கருத்து கேட்டு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தார். 

இதனையடுத்து, ஆம் ஆத்மிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கி தம் தலைமையிலான கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயன்றது. ஆனால் இதை ஆம் ஆத்மி கட்சியினர் மறுத்துவிட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், பாஜக தலைமை சந்தோஷத்தில் இருந்து வந்தது. 

 

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக டெல்லி அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறுகையில் ஆம் ஆத்மி கட்சி விரும்பினால் நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைக்க தயார் என்று அதிரடியாக கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடும் எனப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் இதுவரை அவர்கள் கூட்டணிக்கு உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

click me!