பா.ம.க.வில் எமர்ஜென்ஸி... கட்டம் கட்டி கழட்டிவிடப்படும் காடுவெட்டி குரு டீம்! பெருங்குழப்பத்தில் அன்புமணி!

By Vishnu PriyaFirst Published Jan 26, 2019, 5:38 PM IST
Highlights

சூழல் இப்படியிருக்க, அடுத்தடுத்து குரு ஆதரவாளர்களின் லிஸ்ட்  பக்காவாக எடுக்கப்பட்டு அன்புமணியின் பார்வைக்கு பிறகு ராமதாஸுக்கு போயிருக்கிறதாம். அவர் கண்ணசைத்தால் அவர்களின் பதவியோடு, அடிப்படை உறுப்பினர் பதவியும் காலியாகும். அதாவது குருவின் சாயலோ, அடையாளமோ கட்சிக்குள் இருக்கவே கூடாது என நினைக்கிறாராம் டாக்டர்.

பா.ம.க.வின் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்று வையுங்கள். அதில் ராமதாஸ், அன்புமணி இருவரின் பெயரையும் உச்சரிக்கும் போது எழாத ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் இன்னொரு பெயரை சொல்லும்போது பீறிட்டு, வெடித்துக் கிளம்பும். அது...

’காடுவெட்டி குரு’. ஆம் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு பா.ம.க. மீது அபரிமிதமான பாசம் உருவாக காரணம் இந்த குருதான். அதேபோல் பா.ம.க.வை சீண்டுவதற்கு மற்ற கட்சிகள் பயந்ததற்கும் காரணம் இந்த குருவேதான். அப்படியொரு அதிரடி ஆளுமை அவர். கடந்த சில வருடங்களாக நோயில் சிக்கியிருந்த காடுவெட்டி குரு, சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். மிகப்பெரிய கண்ணீர் கடலுக்கு நடுவில்தான் அவரது இறுதி சடங்குகள் நடந்தது. குருவுக்கு இருக்கும் செல்வாக்கை ராமதாஸும், அன்புமணியும் மிச்சசொச்சம் இல்லாமல் உணர்ந்ததும் அன்றுதான்.

 

ஆனால் குரு மறைவுக்குப் பின் அவரது மனைவியை தவிர அவர் குடும்பத்தின் மற்றவர்கள் ராமதாஸையும், அன்புமணியையும் கடுமையாக விமர்சிக்க துவங்கிவியுள்ளனர். குறிப்பாக குருவின் அம்மாவும், சகோதரிகளும் ‘எங்க குரு சாவுக்கு காரணமே அந்த குடும்பம்தான். ஆபரேஷன், சிகிச்சைன்னு எல்லாத்துலேயும் ஏதோ கணக்கு வெச்சு அலட்சியம் காட்டிட்டாங்க!’ என்று பூகம்பத்தை கிளப்பியுள்ளனர். இது போதாதென்று குருவின் மகனை வைத்து பெரும் கூட்டம் ஒன்றை போட்டு ராமதாஸ் குடும்பத்துக்கு ரவுசு காட்டியுள்ளது அதிருப்தி கோஷ்டி. பதிலுக்கு ராமதாஸோ அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம். 

அதாவது குருவின் ஆதரவாளர்களாக இப்போது கட்சிக்குள் இருந்து கொண்டிருப்பவர்களை கட்டம் கட்டி கழட்டி விட துவங்கியுள்ளாராம். தஞ்சை மாவட்ட மாஜி பா.ம.க. செயலாளரான வழுவூர் வி.ஜி.கே. மணியை நீக்கியவர், அடுத்த சில வாரங்களில் முன்னாள் மாநில துணைத் தலைவரான ஸ்டாலினையும் கழட்டிவிட்டிருக்கிறார். காரணம் “குருவின் குடும்பத்துக்கு மறைமுகமாக உதவினார்.” என்பதாம். 

திடீரென நீக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சியின் உச்சத்துக்கு போன ஸ்டாலின், ‘விசாரணைன்னு எதுவுமே இல்லாம தூக்கி வீசுறதுதான் ஐயாவோட புது ஸ்டைலா போயிருக்குது. அவரை தப்பான வழியில சிலர் கூட்டிட்டு போறாங்க. இது கட்சிக்கு சீரழிவைதான் தரும்!’ என்று பொங்கியிருக்கிறாராம். ஆனால் பா.ம.க. தரப்போ ‘ஸ்டாலின் மது விற்பதாக தகவல். மருத்துவர் எதை வேண்டுமானாலும் மன்னிப்பார் ஆனால் இதை ...’ என்று பல்லைக்கடிக்கிறார்கள். 

சூழல் இப்படியிருக்க, அடுத்தடுத்து குரு ஆதரவாளர்களின் லிஸ்ட்  பக்காவாக எடுக்கப்பட்டு அன்புமணியின் பார்வைக்கு பிறகு ராமதாஸுக்கு போயிருக்கிறதாம். அவர் கண்ணசைத்தால் அவர்களின் பதவியோடு, அடிப்படை உறுப்பினர் பதவியும் காலியாகும். அதாவது குருவின் சாயலோ, அடையாளமோ கட்சிக்குள் இருக்கவே கூடாது என நினைக்கிறாராம் டாக்டர். பா.க.க.வினரே ராமதாஸின் இந்த அதிரடியைன் ‘கட்சிக்குள் எமர்ஜென்ஸி நடக்கிறது’ என்று விமர்சிக்கிறார்கள்.

click me!