எடுத்த எடுப்பிலேயே கர்நாடகத்துக்கு கண்டனம். தமிழக அரசு துணிந்து நடவடிக்கை எடுக்கனும். அதிமுக தீர்மானம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 10, 2021, 11:13 AM IST
Highlights

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாக கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றுக்கு இரண்டாக தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது,

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதுகுறித்து விவாதிக்க நேற்று அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது அக்கட்சியின், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முதலாவது தீர்மானமாக தமிழ்நாட்டின் இதயத்துடிப்பான காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமையை காக்க வேண்டும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தின் முழு விவரம்: 

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கான உரிமை நிலைநாட்டப்பட இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியால் நம் உரிமைகள் நிலைநாட்டப்பட்டது என்பது உலகறிந்த வரலாறு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே, ஏரகோள் என்னும் இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டி இருக்கிறது. ஒரு நதியின் கீழ் பாசன பகுதியினரின் ஒப்புதலின்றி மேல் பாசன பகுதியினர் அணை கட்டிக் கொள்ளக் கூடாது என்பது சர்வதேச நடைமுறை ஆகும். இதையே உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றுகின்றன. இதைமீறி கர்நாடக அரசு அணை கட்டி உள்ளது. இது வன்மையாககண்டிக்கத்தக்கது. 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாக கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஒன்றுக்கு இரண்டாக தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது, தமிழ்நாட்டின் இசைவைப் பெறாமல் புதிய அணையை  கர்நாடக அரசு மேகதாதுவில் கட்ட இயலாது, அவ்வாறு கர்நாடக அரசு முயற்சிக்குமேயானால், தமிழகம் அதனை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது என்று 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சராக வீற்றிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்கள். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அணைகள் கட்டப்படுவதற்கு, எதிராக வழக்குத் தொடுப்பதை 2015-2016 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது அப்போதைய நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் சுட்டிக்காட்டி அணைகள் கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதி அளித்தார். 

அதேபோல் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு .எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது பாரதப் பிரதமர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது எனவும், கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் நிராகரித்து திருப்பி அனுப்புமாறு, ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். மேலும் பாரதப்பிரதமர் அவர்களை நேரில் இரண்டு முறை சந்தித்த போது மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி வழங்கினால் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் சூழ்நிலை ஏற்படும் என்றும் எடுத்துக் கூறினார். எனவே மேற்சொன்ன வரலாற்று உண்மைகளை நினைவில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைந்தும், துணிந்தும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

click me!