பாஜகவை விமர்சித்ததால் கர்நாடக முதல்வர் மீது பெங்களூரு காவல் ஆணையரிடம் புகார்; எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் கோரிக்கை...

First Published Jan 13, 2018, 10:41 AM IST
Highlights
Complaint against Karnataka Chief Minister of Karnataka for criticizing the BJP Request FRI registration......


பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும், அவற்றால் மக்கள் படும் அவதி குறித்தும் கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்ததற்கு பெங்களூரு காவல் ஆணையரிடம் பாஜகவினர் புகார் அளித்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

மைசூரு மாவட்டத்தில் நேற்று காலை தனது இல்லத்தில் முதலமைச்சர் சித்தராமையா "ஜனதா தரிசனம்" என்னும் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார். இதில் கலந்துகொண்ட மக்களிடம் சித்தராமையா மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம், "பா.ஜனதாவினர் தாங்கள் பயங்கரவாதிகள், தங்களை கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பா.ஜனதாவினரை காவலாளர்கள் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. சட்டசபை தேர்தலில் அவர்களை தோற்கடிப்பதன் மூலமாக மக்களே கைது செய்து வீட்டுக்கு அனுப்புவார்கள்.

கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளின் அட்டூழியங்களை மக்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

மக்கள் மனதில் வன்முறை, மதவாதத்தை பா.ஜ.கவினர் விதைத்து வருகிறார்கள். மக்கள் அனைவருக்கும் இது தெரியும். இப்படிப்பட்டவர்களை மக்கள் சும்மா விடமாட்டார்கள்.

கர்நாடகத்திற்கு வந்து காங்கிரசு ஆட்சியை பற்றி விமர்சிப்பேன் என்று பேசிய பிரதமர் மோடி, தங்களது மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்  என்று முதல்வர் சித்தராமையா பேசினார்.

மேலும், காங்கிரசு மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ், "இந்துதுவா என்பது மனதில் இருக்க வேண்டும். இப்போது இந்துத்துவாவை பிரசாரம் செய்யும், பா.ஜ. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாதுரம் கோட்சேவை ஆதரிப்பவர்கள். இவர்கள் இந்து பயங்கரவாதிகள் என்றும், பா.ஜ.கவை தடை செய்ய வேண்டும்" என்றும் பேசினார்.

இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பா.ஜ. மாநில மூத்த தலைவர் சுரேஷ்குமார், சுனீல்குமார் ஆகியோர் பெங்களூரு காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அந்த மனுவில், "பொறுப்புளள அரசியல் தலைவராக உள்ள மாநில முதல்வர் இப்படி பேசுவது சரியல்ல..பா.ஜ.கவையும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் அவதூறாக பேசிய சித்தராமையா, காங்கிரசு மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

click me!