
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பனா அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, கன்னடமொழியும், கம்ப்யூட்டரை இயக்கும் அடிப்படை விஷயங்களையும் கற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து சசிகலா, அவரின் உறவினர் இளவரசி, திவாகரன்ஆகியோர் பெங்களூரு பரப்பனா அக்ரஹார சிறையில்அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறையில் வயது வந்தோருக்கான கல்வி திட்டத்தின் கீழ், சசிகலா கன்னட மொழியும், அதன் அடிப்படை விஷயங்களையும் கற்று வருகிறார். கன்னடத்தின் அடிப்படை வார்த்தைகளை எழுதவும், அதை எப்படி உச்சரித்து பேசுவது என்பதையும் சசிகலாவும், இளவரசியும் கற்று வருகின்றனர் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கூடுதலாக, கம்ப்யூட்டர் இயக்குவது குறித்த அடிப்படை விஷயங்களையும் இருவரும் ஆர்வமாகக் கற்று வருகின்றனர்.
சிறையில் மவுனவிரதம் இருந்து வரும் சசிகலா, கன்னடமொழியை வாய்மொழியாக கற்பதைக் காட்டிலும், எழுதுவதில் அதிகமான ஆர்வத்துடன் உள்ளார். கன்னடமொழிக்கான பட்டயப் படிப்பில் இருவரும் சேர்ந்து பயின்று வருகின்றனர் என்றும், சசிகலா கன்னட மொழியை சிறப்பாக எழுதக் கற்று வருகிறார் என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டும்லாமல், சசிகலா புத்தகங்கள் படிப்பதிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். சிறையில் உள்ள நூலகத்தை ஆண் கைதிகள் மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வரும் நிலையில், இப்போது சசிகலா உள்ளிட்ட சில பெண் கைதிகளும் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பெண்களுக்காக தனிப் பிரிவும் சிறை நூலகம் திறந்துள்ளது.
இது குறித்து சிறை வட்டாரங்கள் கூறுகையில், “ விரைவில் சிறையில் 2 புதிய நூலகங்கள் திறக்கப்பட உள்ளன. அதில் ஒன்று ஆண் கைதிகளுக்காகவும், மற்றொன்று பெண் கைதிகளுக்காகவும் திறக்கப்பட உள்ளன. சிறையில் பெண் கைதிகள் நூலகத்தில் மாதத்துக்கு 91 நாளேடுகள், வார, மாத ஏடுகள் வாங்குவதற்காக ரூ.30 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. சிறையில் பெண் கைதிகளுக்கும் நூலக வசதி கிடைக்க சசிகலாவின் முயற்சி முக்கிய காரணமாக அமைந்தது. அவரின் தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக தமிழ் நூல்களுக்கு தனியாக அடுக்குகள் உருவாக்கப்பட்டு, விரைவில் அந்த நூலகம் திறக்கப்பட உள்ளது’’ எனத் தெரிவிக்கின்றன.