விரைவில் கூடுகிறது திமுக பொதுக்குழு.... தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.... கட்சிக்கு திரும்புகிறார் அழகிரி?

First Published Aug 10, 2018, 4:59 PM IST
Highlights

கருணாநிதியின் மரணத்தால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பது போல தி.மு.க. தலைவர் பதவியும் காலியாக உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அழகிரிக்கு முக்கிய பொறுப்பு தர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருணாநிதியின் மரணத்தால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பது போல தி.மு.க. தலைவர் பதவியும் காலியாக உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அழகிரிக்கு முக்கிய பொறுப்பு தர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 2016 டிசம்பர் 1-ம் தேதி முதல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஊய்வில் இருந்து வந்தார். மூச்சு விடுவதை எளிதாக்க டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டதால் அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஸ்டாலின் மேற்கொண்டார். 

அதன் பிறகு தமிழகம் முழுவதும் கட்சிப் பணிகளை மு.க.ஸ்டாலின் தீவிரமாக மேற்கொண்டார். 6 முறை சட்டமன்றம் உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தற்போது திராவிட முன்னேற்ற கழகத்துக்கு தலைமை ஏற்கும் மிகப்பெரிய பொறுப்பும் சவாலும் வந்துள்ளது. சுமார் 2 வருடங்களாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த கருணாநிதி, கடந்த ஜூலை 27-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 11 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 7-ம் தேதி உயிரிழந்தார். கருணாநிதி மறைவையடுத்து திமுகவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுகவின் முக்கிய நிர்வாகிடம் விசாரித்த போது ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்றார். இந்நிலையில் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மு.க.அழகிரி திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.ஆனால் கருணாநிதி மருத்துவமனையில் இருந்த 11 நாட்களும் அழகிரி, ஸ்டாலின் இருவரும் பலமுறை பேசியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அழகிரிக்கும்  முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

click me!