
’என்னோட பேச்சு முன்னுக்கு பின்னா அப்படியிப்படின்னுதான் இருக்கும். நீங்களே அதை கோர்வைப்படுத்திக்குங்க.’ என்று பொதுக்கூட்டங்களில் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுக்கும் ஒரே அரசியல் தலைவர் விஜய்காந்த்தான். ஆனாலும் கூட அவரது பேச்சுக்கென்று அவரது கட்சியினர் தாண்டி பரவாலக ஒரு கிரேஸ் இருக்கிறது.
சமீபகாலமாக தொடர் சிகிச்சையிலிருந்த விஜயகாந்த் கடைசியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு வழியாக பிரச்சாரத்துக்கு களமிறங்கினார். என்ன செண்டிமெண்டோ தெரியவில்லை அவர் ஒரு நாள் பிரச்சாரம் முடித்த நிலையில் மறுநாள் தேர்தலே ரத்தாகிவிட்டது.
இதற்கிடையில் மீண்டும் கேப்டனின் உடல் நிலை பாதிக்கப்பட்டுவிட மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ரெடியானார். அவர் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் அவரது உடல் நிலை பற்றி பல வகையான தகவல்கள் பரவியதால் பெரும் கவலை கொண்டது தே.மு.தி.க. வட்டாரம்.
இந்நிலையில் தொண்டர்களுக்கும் கேப்டனுக்கும் இடையில் விழுந்திருக்கிற இடைவெளியை குறைக்கலாம் என்று முடிவு செய்தார் பிரேமலதா. விளைவு தொழிலாளர் தினமான இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மாலையில் கூட்டம் நடத்த ஏற்பாடு நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைவரின் தடாலடி பேச்சை கேட்க அவரது தொண்டர்கள் தயாராகும் நிலையில் இன்று பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்வது டவுட்டுதான் என்றொரு தகவல் இரண்டாம் நிலை நிர்வாகிகளிடையே பரவி அவர்களை டென்ஷனாக்கியுள்ளது. அப்படியே கலந்து கொண்டாலும் பேசுவாரா? என்றும் ஒரு டவுட் ஓடுகிறதாம்.
ஆனால் தொண்டர்களுக்கு இதெல்லாம் தெரியாது. அவர்கள் கரை வேஷ்டியை அயர்ன் பண்ண கொடுத்துவிட்டு கூட்டத்துக்கு ஷோக்காக ரெடியாகிக் கொண்டிருக்கிறார்கள்.