இதுக்கு ஒரு முடிவே இல்லையா? கல்வியை ஊழல் பிடியிலிருந்து நீக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? பாஜக கேள்வி.!

By vinoth kumarFirst Published Dec 31, 2021, 4:06 PM IST
Highlights

தனியார் கல்லூரிகளில் பணியாற்றுபவர்களை விட பன்மடங்கு அதிக ஊதியம் மற்றும் சலுகைகளை பெறும் அரசு கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு அலட்சியம் ஏன்? தனியார் கல்லூரிகளை வர்த்தக நிறுவனங்கள் என்று கூறும் அதே நிலையில், அரசு கல்லூரிகளை 'ஊழல் நிறுவனங்கள்' என்று அழைப்பதில் தவறேதும் இல்லை.

சமுதாயத்தை சீரமைக்க வேண்டிய கல்லூரிகள், சமூக விரோதிகளை உருவாக்குவதை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மாநிலக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நேற்று அம்பேத்கர் கல்லூரி மற்றும் தியாகராயர் கல்லூரி மாணவர்களுக்குள் மோதல். ஒருவருக்கு வெட்டு, ஆறு பேர் கைது என்ற செய்தி கவலை தருகிறது. இந்த நான்கு கல்லூரிகளும் அரசு மற்றும் அறக்கட்டளைகளை சார்ந்தவை. சென்னை நகரின் மிக முக்கிய பகுதிகளில் அமைந்துள்ளவை. நீண்ட காலமாக செயல்படுபவை. இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள், முதல்வர்கள் அனைவரும் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர்களாகவே இருப்பார்கள். 

தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் பல இருக்கும் நிலையில், அந்த கல்லூரி மாணவர்களுக்கிடையே இது போன்ற மோதல்கள் நடைபெறாதது ஏன்? அரசு மற்றும் அறக்கட்டளை கல்லூரிகளில் மட்டும் ஒழுக்க குறைவு மற்றும் கட்டுப்பாடற்ற மாணவர்கள் உருவாகுவதற்கு காரணம் என்ன? உறுதியாக இதற்கு காரணம் மாணவர்கள் அல்ல, அந்த கல்லூரிகளின் நிர்வாகங்களே. ஆண்டாண்டு காலமாக இந்நிலையே இந்த கல்லூரிகளில் தொடர்கிறது. சமுதாயத்தை சீரமைக்க வேண்டிய கல்லூரிகள், சமூக விரோதிகளை உருவாக்குவதை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன இந்த நிர்வாகங்கள் என்று சொல்வது மிகையாகாது. இந்த நிர்வாகங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதமே இப்படி தான் உள்ளன. ஆகையால் இந்த கல்லூரிகளை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் மட்டுமல்ல. அவசரமும் கூட. 

இது போன்ற மோதல்கள் எழும் போதெல்லாம் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அதன் பிறகு மாணவர்களின் நலன் கருதி என்ற அடைமொழியோடு கல்லூரி நிர்வாகம், மற்றும் பெற்றோர், மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி மன்னிப்பு கொடுக்கப்படும். இதனால் குற்றங்கள் குறைவதில்லை. மாறாக அதிகரிக்கிறது. காவல் துறையினர் நினைத்தால் தவறாக நடக்கும் மாணவர்களை அடக்க முடியும். ஆனால், நிர்வாகத்தின் அலட்சியம், அரசியல் தலையீடு ஆகியவற்றால் மோதல்கள்  தொடர்கதையாகி விடுகின்றன. 

தனியார் கல்லூரிகளில் ஏன் இது போன்ற மோதல்கள் நடைபெறுவதில்லை என்ற கேள்விக்கு யாரும் பதில் கூறமாட்டார்கள். உறுதியான, கண்டிப்பான நிர்வாகம், தரமான கல்வி, நல்ல பேராசிரியர்கள், கல்லூரி விதிகளை சரியான முறையில் அமல்படுத்துவது, மேலாண்மை என அனைத்திலும் தனியார் கல்லூரிகள் அரசு மற்றும் அறக்கட்டளை கல்லூரிகளை விட சிறந்து விளங்குவது ஏன்? தனியார் கல்லூரிகளில் பணியாற்றுபவர்களை விட பன்மடங்கு அதிக ஊதியம் மற்றும் சலுகைகளை பெறும் அரசு கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு அலட்சியம் ஏன்? தனியார் கல்லூரிகளை வர்த்தக நிறுவனங்கள் என்று கூறும் அதே நிலையில், அரசு கல்லூரிகளை 'ஊழல் நிறுவனங்கள்' என்று அழைப்பதில் தவறேதும் இல்லை. கல்வியை 'ஊழல்' பிடியிலிருந்து நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? முடிவே இல்லாது தொடர்கதையாக நீண்டு கொண்டேயிருக்கும் இந்த அவல நிலைக்கு தீர்வு தான் என்ன? அடுத்த தலைமுறையை சீர்குலைக்கும் கல்லூரிகளின் கட்டமைப்பை மாற்றப்போவது யார்? எப்போது? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!