நான்காண்டாக உயரும் கல்லூரி படிப்பு.. நீட் தேர்வைவிட கொடுமை.. மத்திய அரசுக்கு எதிராக கேட் போடும் பொன்முடி!

Published : Feb 22, 2022, 09:07 PM IST
நான்காண்டாக உயரும் கல்லூரி படிப்பு..  நீட் தேர்வைவிட கொடுமை.. மத்திய அரசுக்கு எதிராக கேட் போடும் பொன்முடி!

சுருக்கம்

இது மாணவர்களின் கல்வி பயிலும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கிறது. மற்றொருபுறம், முதல் மூன்றாண்டுகளில் சராசரி ஒட்டுமொத்த தரப்புள்ளி (CGPA) 7.5-க்கும் குறைவாக பெற்றிருப்போர் நான்காமாண்டு செல்ல இயலாது என்பது இயற்கை நீதிக்கு புறம்பானதாகும். 

மத்திய அரசு அறிமுகப்படுத்த விரும்பும் புதிய கல்வி முறை, நீட் தேர்வு முறையை விட கொடுமையானது. இது மாணவர்களை கல்விக் கூடங்களிலிருந்து வெளியேற்ற வகை செய்யும் என்று தமிழக உயர்க் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தேசியக் கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாடு கோரும் மத்திய அரசின் மின்னஞ்சல் தமிழக அரசால் 18.02.2022 அன்று பெறப்பட்டது. இது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தினை பெற்று விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு அரசிற்கு குறைந்த கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, வரைவு செயலாக்கத் திட்டம் (Draft Implementation Plan) குறித்து ஆய்வு செய்து, அரசின் நிலைப்பாடு விரைவில் அனுப்பப்படும். தேசியக் கல்விக் கொள்கை, அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் முதல்வர் ஸ்டாலினின் சீரிய தலைமையில் நடைபெறும் தமிழக அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 

பட்டப்படிப்பு பயில முதல்நிலைத் தகுதிகளை (Entry requirements) மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டுமென்று இவ்வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசின் கொள்கைக்கு ஏற்புடையதல்ல. மருத்துவம், பொறியியல் படிப்புகளில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பயில நுழைவுத் தேர்வு தடையாக இருந்த காரணத்தால், அன்றைய முதல்வர் கருணாநிதியால் ரத்து செய்யப்பட்டது. இலவசக் கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, தேவையான அளவு கல்லூரிகளும், அவற்றில் போதுமான அளவு வேலை வாய்ப்பிற்கேற்ற பாடப்பிரிவுகளும் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநீதி உத்தரவுகளால் அனைத்து தரப்பு மாணவர்களுக்குமான கல்வி என்பது தமிழக அரசால் உறுதிப்படுத்தப்பட்டது.

அதுபோல, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயில நுழைவுத்தேர்வு கட்டாயமென்பதை திமுக தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதை தடுக்கும் நோக்கில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை கட்டாயமாக தடுக்கப்பட வேண்டும். எனவே, தற்போது உள்ள 10+2+3 என்ற கல்வி முறையை மாற்றக் கூடாது என்பதே தமிழகத்தின் நிலைப்பாடாகும். ஆனால், தற்போதைய தேசியக் கல்விக் கொள்கையின்படி மூன்றாண்டு பட்டப்படிப்பில் முதலாண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், இரண்டாமாண்டில் நிறுத்தினால் பட்டயம், மூன்றாமாண்டு முடித்தால் பட்டம் போன்றவை இடைநிற்றலை ஊக்குவிக்க செய்யுமென்பதால் அதனை தமிழக அரசு வன்மையாக எதிர்க்கிறது.

மேலும், மூன்றாண்டு இளநிலைப் பட்டப் படிப்பே தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கையில் இந்த உயர்கல்வி வரைவுத் திட்டம் நான்காண்டு இளநிலைப் பட்டத்தை பரிந்துரைக்கிறது. இது மாணவர்களின் கல்வி பயிலும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கிறது. மற்றொருபுறம், முதல் மூன்றாண்டுகளில் சராசரி ஒட்டுமொத்த தரப்புள்ளி (CGPA) 7.5-க்கும் குறைவாக பெற்றிருப்போர் நான்காமாண்டு செல்ல இயலாது என்பது இயற்கை நீதிக்கு புறம்பானதாகும். இதுவும் தமிழக அரசின் கல்வி கொள்கைக்கு முரணானதாகும். மேற்கண்ட வரைவுக் கொள்கையின்படி, ஒரு பருவத்தின் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சியுறாத மாணவர்கள் அடுத்த பருவத்தில் அனுமதிக்கப் படாமல் தற்காலிக இடைநிறுத்தம் (Break System) செய்யப்பட்டால், மாணவர்களின் கற்கும் காலம் (Duration of Study) நீட்டிக்கப்படுவதுடன் அவர்களுடைய பயிலும் ஆர்வம் குறைந்து இடைநிற்றல் அதிகரிக்கும் என்பதால் தமிழக அரசு அதனை எதிர்க்கிறது.

மத்திய அரசு அறிமுகப்படுத்த விரும்பும் புதிய முறை, நீட் தேர்வு முறையை விட கொடுமையானது. இது மாணவர்களை கல்விக் கூடங்களிலிருந்து வெளியேற்ற வகை செய்யும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே சீர்குலைக்கும் செயல். ஏழை, எளிய விளிம்புநிலை மாணவர்களின் நலனுக்கு எதிரானது. மேலும், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கென குழு ஒன்று அமைக்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்பிற்கிணங்க அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது” என்று அறிக்கையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!