கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம்… 4 வருடத்தில் 4 ஆலோசகர்களுக்கு 4 கோடி சம்பளம்… ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்!!

By Narendran SFirst Published Nov 20, 2021, 12:08 PM IST
Highlights

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த ஆட்சி ஏராளமான ஊழல்களும் முறைகேடுகளும் நடந்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களையும் முறைகேடுகளையும் களைய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில், நான்கு பேருக்கு நான்கு ஆண்டுகளில், நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் தரப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 1,142 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பில் 73 பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, இதுவரை 322.62 கோடி ரூபாய் மதிப்பிலான 56 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.  இத்திட்டம் துவக்கப்பட்ட போது, மாநகராட்சி சார்பில் ஆலோசகர்கள் சிலர் நியமிக்கப்பட்டனர். ஆட்சி மாறிய பின், கடந்த ஆகஸ்ட் மாதம் தான் மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்துக்கான ஆலோசகர்கள் யார் யார், அவர்களுக்கு தரப்பட்டுள்ள ஊதியம் தொடர்பான பல்வேறு தகவல்களையும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் வாங்கியுள்ளார். அதில், 2018 ஆம் ஆண்டில் நிர்வாக ஆலோசகர்களாக நியமித்ததிலிருந்து, நான்கு ஆண்டுகள் தரப்பட்ட ஊதிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட, பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற நான்கு பேர்தான், குழுவின் தலைவர், நகர்ப்புற கட்டமைப்பு வல்லுனர், கொள்முதல் மற்றும் ஒப்பந்த வல்லுனர், போக்குவரத்து வல்லுனர் என்ற நான்கு பொறுப்புகளில், 2018 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்போது குழுத் தலைவருக்கு மாதத்துக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 592 ரூபாயும், கட்டமைப்பு வல்லுனருக்கும், போக்குவரத்து வல்லுனருக்கும் தலா 2 லட்சத்து 79 ஆயிரத்து 870 ரூபாயும், கொள்முதல் மற்றும் ஒப்பந்த வல்லுனருக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 148 ரூபாயும் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது. இதற்காக மாதத்துக்கு 11 லட்சத்து 19 ஆயிரத்து 480 ரூபாயும், ஆண்டுக்கு ஒரு கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 760 ரூபாயும் ஸ்மார்ட் சிட்டி நிதியிலிருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி., தொகையுடன் சேர்த்து செலவிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில், குழுத் தலைவரைத் தவிர, மற்றவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களில் குழுத் தலைவருக்கு இறுதியாக மாதாந்திர ஊதியம் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து, 3 லட்சத்து 41 ஆயிரத்து 278 ரூபாயும், போக்குவரத்து, கட்டமைப்பு வல்லுனர்களுக்கு தலா 3 லட்சத்து 26 ஆயிரத்து 440 ரூபாயும், கொள்முதல் மற்றும் ஒப்பந்த வல்லுனருக்கு 3 லட்சத்து 11 ஆயிரத்து 603 ரூபாயும் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது. அதாவது, மாதத்துக்கு 13 லட்சத்து 5,761 ரூபாயும், ஆண்டுக்கு ஒரு கோடியே 56 லட்சத்து 69 ஆயிரத்து 132 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில், இந்த நான்கு ஆலோசகர்களுக்கு மட்டும், நான்கு ஆண்டுகளில் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் ஊதியமாக, ஸ்மார்ட் சிட்டி நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இதே கோவை மாநகராட்சியில்தான், பல ரோடுகள் கந்தலாகிக் கிடக்கும் நிலையில், நிதியில்லை என்று 150 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துாய்மைப் பணியாளர்கள் பலருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படாமல், ஒப்பந்த அடிப்படையில் அடிமாட்டு விலையில் சம்பளம் தரப்படுகிறது. ஆனால் முந்தைய ஆட்சியில் ஆலோசகர்கள் என்ற பெயரில், அப்போதிருந்த ஆளும்கட்சியினராலும், அதிகாரிகளாலும் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு பல கோடி ரூபாய் ஊதியத்துக்காக செலவிடப்பட்டுள்ளது. ஒரு திட்டம் தயாரிக்கப்படும் போது, ஆலோசகர்களிடம் ஒப்படைத்து, அதை வடிவமைப்பது வழக்கம்தான். ஆனால் திட்டம் துவக்கப்பட்டு, பணிகள் நடந்தபோதும், ஆலோசகர்களுக்கு ஏன் இவ்வளவு செலவிட வேண்டும், உண்மையிலேயே இவர்களுக்கு இந்த ஊதியம் முழுதாகப் போய்ச் சேர்ந்ததா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களையும் முறைகேடுகளையும் களைய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இதுக்குறித்து விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!