5 போலீஸ் சூர்யாவை காப்பாத்திடுமா.? 10 ஆயிரம் பேர் வீட்டு முன்னாடி நிற்போம். காடுவெட்டி குரு மகன் வெறிப்பேச்சு.

By Ezhilarasan BabuFirst Published Nov 20, 2021, 11:16 AM IST
Highlights

வெறும் 5 துப்பாக்கி ஏந்திய போலீசார் சூரியாவை காப்பாற்றிவிட முடியாது, பத்தாயிரம் வன்னிய மக்கள் சூர்யா வீட்டின் முன்பு திரண்டு வந்தால் சூர்யாவால் என்ன செய்ய முடியும்?  இயக்குனர் ஞானவேலையும் காப்பாற்ற முடியாது.  

வெறும் ஐந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது என்றும், ஒரு பத்தாயிரம் வன்னியர்கள் சூர்யாவின் வீட்டின் முன் திரண்டால் சூர்யாவால் என்ன செய்ய முடியும் என்றும் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கேள்வி எழுப்பியுள்ளார். சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் அதன் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே அவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், மீண்டும் சூர்யாவை எச்சரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் ஜெய்பீம், இதில் வன்னியர்கள் இழுவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் பாமகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சூர்யாவுக்கு எதிரான இந்த  வன்முறை பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் பாமகவை கண்டித்து வருகின்றனர். அதேபோல வட மாவட்டங்களில் வன்னியர்கள் வலுவாக உள்ள பகுதிகளில் சூர்யாவின் ரசிகர் மன்றங்களை கலைத்து சூர்யாவுக்கு பாட்டாளி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மேற்கு மாவட்டங்களிலும் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தாரின் திரைப்படங்களை திரையிட வேண்டாம் என சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பாமக மாவட்ட செயலாளருமான அருள் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். 

சூர்யா-பாமக மோதல் என்பது நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் சூர்யாவின் வீட்டிற்க்கு துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் வன்முறை பேச்சுக்களை வெளிபடுத்தி வருகின்றனர். முன்னதாக இந்த விவகாரத்தில் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என காடு வெட்டி குருவின் மகன் கனலரசன், மற்றும் மருமகன் மனோஜ் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர். இது குறித்து ஏற்கனவே பேட்டி கொடுத்திருந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம் என எச்சரித்திருந்தார். அதேபோல் கனலரசனும், நடிகர் சூர்யா அவர்கள் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது, அவர் ஏழை எளிய மாணவர்களை படிக்க வைக்கிறார். பல நல்லது செய்கிறார் என்பதை கேள்விபட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட ஒருவர்  நல்லவராகத்தான் இருக்க முடியும், எங்களது கோபம்  சூர்யாமீது அல்ல, முழுக்க முழுக்க ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மீதுதான் என கூறியிருந்தார். 

இந்நிலையில் சூர்யாவுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக அவரது பேனர் மற்றும் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்துவது, அவரது உருவ பொம்மைகளை எரிப்பது போன்ற நடவடிக்கைகளில் பாமகவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சூர்யா தோடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள கனலரசன் எங்கள் சமுதாய மக்கள் இந்த விஷயத்தை மிகவும் பொறுமையாக அமைதியாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள், வெறும் 5 துப்பாக்கி ஏந்திய போலீசார் சூரியாவை காப்பாற்றிவிட முடியாது, பத்தாயிரம் வன்னிய மக்கள் சூர்யா வீட்டின் முன்பு திரண்டு வந்தால் சூர்யாவால் என்ன செய்ய முடியும்?  இயக்குனர் ஞானவேலையும் காப்பாற்ற முடியாது. இந்த மக்கள் பொறுமையாக இருக்கிறார்கள் என்பதற்காக  நீங்கள் ஒரு கடிதம் கொடுக்கிறீர்கள், அதில் பெயர் அரசியல் செய்யாதீர்கள் என்று கூறுகிறீர்கள். அதில் என்ன பெயர் அரசியல் இருக்கிறது? அப்படி என்றால் நீங்கள் ஏன் குரு என்ற பெயரை வைத்து படம் எடுத்தீர்கள், அந்த இடத்தில் அந்த காலண்டருக்கு அவசியமே இல்லை, இந்த விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இனிமேல் சூர்யா எந்த படத்திலும் நடிக்க முடியாது, ஞானவேல் அவரது வீட்டை விட்டு வெளியில் வரமுடியாது எனபதனை மாவீரன் மஞ்சள் படை சார்பாக இதனை தெரிவித்துக்கொள்கிறோம். என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

click me!