
பண்டைத் தமிழ் பக்தி இலக்கியம் படைத்த ஆண்டாள் நாச்சியாரை கொச்சையாகப் பேசி அவதூறு செய்த கவிஞர் வைரமுத்துவுக்கு கோயமுத்தூர்காரர்கள் வித்தியாசமான பார்சல் அனுப்பி போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, அதே ராஜபாளையத்தை அடுத்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து, பக்தியால் தமிழ் பரப்பி, ஆழ்வார்களில் ஒருவராகி, அப்பகுதி மக்கள் பலருக்கு குலதெய்வமான ஆண்டாள் குறித்து, சிறப்பித்துச் சொல்வதாகக் கூறி, அவதூறான கருத்துகளை முன்வைத்தார். நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த பலரும் உள்ளக் குமுறலை வெளிப்படுத்த வழியின்றிக் கலைந்து சென்றாலும், இந்த நிகழ்ச்சி குறித்து மறுநாள் ஒரு செய்தித் தாளில் வெளியான கட்டுரை மூலம் பரவியது. இதை அடுத்து அதைப் படித்துப் பார்த்த பக்தர்கள் பலரும் பதறிப் போனார்கள்.
கட்டுரையை எழுதி, பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் பல இடங்களில் நடைபெற்றன. சாலைமறியல், கண்டனப் பொதுக் கூட்டங்கள் என நடைபெற்ற நிலையில், வைரமுத்து தனது பேச்சு எவர் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துவதாகக் கூறினார். ஆனால் அவர் தெரிவித்த வருத்தத்தை எவரும் ஏற்கவில்லை. வைரமுத்து தான் செய்த தவறை உணர்ந்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி, போராட்டங்களை விரிவாக்கியுள்ளனர்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் பாஜக., பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க வில்லை என்றாலும், சென்னையில் ஓரிரு இடங்களில், குறிப்பாக வைரமுத்துவின் வீட்டின் முன்னர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு தொண்டர்கள் சிலர் கைதாகி வெளியில் வந்தார்கள்.
இந்நிலையில், ஆண்டாள் குறித்து விமர்சனம் செய்த வைரமுத்துவை கண்டித்து, கோவை மாவட்ட பா.ஜ.க.,வினர் வைரமுத்துவிற்கு உப்பு அனுப்பி போராட்டம் நடத்தினர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள துணை தபால் நிலையத்திலிருந்து உப்பு பார்சலை அனுப்பி வைத்தனர். அப்போது, வைரமுத்து சோற்றில் உப்பு போட்டு சாப்பிடட்டும், அவருக்கு சொரணை வரட்டும் என்பதற்காகத்தான் உப்பு அனுப்பினோம். மேலும், ராஜபாளையத்தில் விழாவை நடத்திய அமைப்பினரின் உப்பைத் தின்றுவிட்டு, அவர்களுக்கே துரோகம் இழைப்பதுபோல், அவர்களின் குலதெய்வத்தை அவர்களின் மேடையிலேயே இகழ்ந்து பேசியுள்ளார். எனவே தான் அவருக்கு உப்பை நினைவூட்டுகிறோம் என்று கூறினர்.