கோயம்பேடு உணவு தானிய சந்தை மீண்டும் திறப்பு..!! அரசிடம் இழப்பீடு கேட்டும் வியாபாரிகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 19, 2020, 12:22 PM IST
Highlights

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை வெள்ளிக்கிழமை அன்று திறக்கப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது.

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை வெள்ளிக்கிழமை அன்று திறக்கப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. வியாபாரிகள் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாததே கொரோனா பரவலுக்கு காரணம் என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து காய்கறி சந்தை திருமழிசை துணைக்கோள் நகரத்திற்கும், பழச் சந்தை மாதவரம் பஸ் நிலையத்திற்கும், பூ மார்க்கெட் வானகரத்திற்கும் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் அங்கு டன் கணக்கில் காய்கறிகள் வீணாவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்கி அதை திறந்து வருமானம் பார்க்கும் அரசு, காய்கறி சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என பொதுமக்களும் வியாபாரிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அனைத்து அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கோயம்பேடு காய்கறி சந்தையை அரசு திறக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. காய்கறி பூ உள்ளிட்ட சந்தைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், உணவு தானிய வணிக வளாக கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மூடப்பட்டு இருந்தது இதனால் கடந்த 5 மாதங்களுக்கு மேலும் வணிகர்கள்  வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது ஆனாலும் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும்  வணிகர்கள் ஒத்துழைப்பு வழங்கி வந்திருக்கின்றனர். 

இந்நிலையில் கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய வணிக வளாகத்தை தூய்மை செய்து மீண்டும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் 18ஆம் தேதி திறக்கப்படும் என்றும் காய்கறி சந்தை 28ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி உணவு தானிய வணிக வளாகம் திறக்கப்பட்டது. இங்குள்ள 492 கடைகளில்  290 கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. பல மாதங்களாக கடைகள் மூடப்பட்டு இருந்ததால், உள்ளே வைக்கப்பட்டிருந்த உணவு வகைகள் அனைத்தும் வீணாகிவிட்டது என்றும், இதனால் ஒரு கடைக்கு குறைந்தபட்சம் ஆறு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள வியாபாரிகள். அதற்கான உரிய இழப்பீட்டை அரசு தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

click me!