கொசு ஒழிக்க, களத்தில் இறங்கிய சென்னை மாநகராட்சி..!! 30 கால்வாய்கள்,210 ஏரிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 19, 2020, 11:02 AM IST
Highlights

கடந்த 2 மாதங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்கள்
சுத்தப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

பெருநகர சென்னை மாநகராட்சி, நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றில் சிறிய அம்பிபியன் வாகனத்தின் மூலம் ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்றும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு முழு விவரம்:- 

பெருநகர சென்னை மாநகராட்சி நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றில் சிறிய ஆம்பிபியன் வாகனத்தின் மூலம் ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்றும் பணியினை 18-9-2020 அன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 48.8 கிலோமீட்டர் நீளம் கொண்ட 30 கால்வாய்கள் மற்றும் 210 ஏரிகள் மற்றும் குளங்கள் போன்றவற்றில் உருவாகின்ற ஆகாயத்தாமரை மிதக்கும் கழிவுகள், சேறு சகதிகளை அகற்றி, தங்குதடையற்ற நீரோட்டத்தை ஏற்படுத்தி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்திட கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆம்பிபியன் உபகரணம் மற்றும் மூன்று ரோபாட்டிக் மல்டி பர்ப்பஸ் எஸ்கலேட்டர் உபகரணங்கள் கொள்முதல் செய்து கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்களின் பயன்பாட்டினால் கடந்த ஆண்டுகளில் கொசு உற்பத்தி பெருமளவில்  கட்டுப்படுத்தப்பட்டு பொது மக்களின் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் நீர் வழித் தடங்களை சுத்தப்படுத்தி கூடுதலாக ஒரு ஆம்பிபயன் புதிய உபகரணம் ஒரு ரோபோட்டிக் மல்டி பர்ப்பஸ்  எஸ்கலேட்டர் உபகரணம் 3 மினி ஆம்பிபியன் உபகரணம் மற்றும் 7 எண்ணிக்கையில் மழைநீர் வடிகால்களில் உள்ள கழிவுகளை உறிஞ்சி அக்கட்சி கழிவுநீரை மறுசுழற்சி செய்து உபயோகிக்க கூடிய உபகரணம் பொருத்தப்பட்ட வாகனங்கள் என மொத்தம் 12 உபகரணங்கள் ரூபாய்  55.46 கோடி செலவினத்தில் கடந்த 2 மாதங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்கள் சுத்தப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நீர் நிலைகள் மற்றும் நீர் வழித் தடங்களை சுத்தப்படுத்தும் பணியினைச் மனித ஆற்றல் கொண்டு மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது மேலே கூறப்பட்டுள்ள சிறப்பு உபகரணங்களை பயன்படுத்துவதால் நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியும் உறுதியுடனும், துரிதமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பெருநகர சென்னை மாநகராட்சி நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றில் சேர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணி புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட மினி ஆம்பிபியன் உபகரணத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மினி ஆம்பிபியன் உபகரணத்தின் செயல்திறனை இன்று ஆய்வு செய்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் எதிர் வரும் மழைக் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து நீர்நிலைகளையும் சிறப்பு உபகரணங்கள் கொண்டு துரிதமாக சுத்தப்படுத்தி கொசு உற்பத்தியை தடுத்து நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

 

click me!