கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருப்பவர் சேனாதிபதி. இவரது 22 வயது மகள் நிவேதா 97 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடக்க இருக்கிறது. கோவை மாநகராட்சியின் 97வது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் 22 வயது கல்லூரி மாணவி நிவேதா. பி.எஸ்.சி இயற்பியல் முடித்துவிட்டு தற்போது முதுகலை இறுதியாண்டு பயின்று வருகிறார். இவர் திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள்.
undefined
அடிப்படை வசதிகள் இல்லாத இந்த வார்டில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவி, கழிப்பறை கட்டித்தருவது என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார் நிவேதா. கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் நிவேதா மேயராகும் வாய்ப்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கோவை திமுக வேட்பாளர் பட்டியலில் கட்சி நிர்வாகி மனைவிகளுக்கும், கட்சியில் பாடுபடாத பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மீனா ஜெயக்குமார் கோவையில் உள்ள 57வது வார்டில், தேர்தல் அலுவலகத்தை திறந்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ஆனால், அந்த வார்டில், திமுக சாந்தாமணியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
வார்டு 52ல், திமுக நகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் என்.கார்த்திக் மனைவி லட்சுமி இளஞ்செழியன் களமிறங்கியுள்ளார். தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக விலகியிருப்பது, அதிமுக தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை காட்டிலும் பூத் அளவில் அதிமுக வலுவாக உள்ளது. மேலும் வலுவான வாக்கு வங்கியையும் கொண்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்த நபர்களே வேட்பாளர்களாக இருப்பதால், உட்கட்சி பூசல் எதுவும் இல்லை.
அதேசமயம் எதிர்கட்சியாக இருப்பதால் அதிமுகவினர் தேர்தல் செலவு செய்ய தயங்குகின்றனர்.இருப்பினும் கோவை தேர்தல் களம் இப்போது அதிமுகவுக்கு சாதகமாகவே இருக்கிறது.திமுக தலைமை மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது ‘வாரிசு’ அரசியல். கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல், வாரிசுகளுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளதால், எப்போதுதான் கட்சியின் உண்மையான தொண்டர்களுக்கு திமுக தலைமை ‘மதிப்பு’ அளிக்குமோ என்ற கவலையில் இருக்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.