
ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய அரசு இதனை செயல்படுத்தாமல் இருந்தது. இதனால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திமுக தொடர்ந்தது. இதனையடுத்து அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதேபோல் உயர் ஜாதி ஏழையினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புகளுக்கு எதிராக முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா அடங்கிய பெஞ்ச் மத்திய அரசுக்கு பல கேள்விகளை முன்வைத்தது. குறிப்பாக உயர்ஜாதி ஏழைகளை அடையாளம் காண ரூ8 லட்சம் வருமான உச்சவரம்பு குறித்து கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர். இந்த வழக்கை கடந்த இரு நாட்களாக அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு மற்றும் திமுக தரப்பு வாதங்களை ஏற்று மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்றும் நடப்பாண்டில் மட்டும் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட திமுகவிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி, சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் களத்திலும் நீதிமன்றங்களிலும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக, முதல் முறையாக அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. இது சமூகநீதியைப் பற்றிய புரிதலும் ஆழமான பற்றுதலும் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி! சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்! இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4,000 மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இதன்மூலம் தங்களுடைய உரிமையை, பலனைப் பெறுவார்கள்.
நாடு முழுவதும் உள்ள கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, உச்சநீதிமன்ற வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு, வாதிட்டு வென்ற இயக்கம் தி.மு.க. என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தி.மு.க.வும் சமூகநீதியின்பால் பற்றுகொண்ட இயக்கங்களும் நடத்திய போராட்டம், இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. மண்டல் குழுப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்குத் தமிழ்நாடு ஆற்றிய பங்களிப்புக்கு ஈடானது இந்த வெற்றி! மிகுந்த மனநிறைவோடு இந்தப் போராட்டத்தில் துணைநின்று பங்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப்பூர்வமாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை, ஆதிக்கச் சக்திகளால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தி.மு.க. வாதாடி வந்ததைப் பெருமையோடு நினைவுகூர்கிறேன். உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்காடி வென்றோம். இப்போது இறுதிக்கட்டமாக அதைத் தடுக்கும் முயற்சியையும் உச்சநீதிமன்றத்தில் வாதாடி, கழகம் முறியடித்திருக்கிறது. இந்தியா சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து நடைபோட தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழும்! திராவிட முன்னேற்றக் கழகம் அதற்கு என்றும் போராடும்! என்று தெரிவித்துள்ளார்.