திமுகவில் மனைவிகளுக்கு சீட்டு வாங்க முந்தியடிக்கும் லோக்கல் நிர்வாகிகள்.. ஒரே உத்தரவில் ஆப்பு வைத்த ஸ்டாலின்

By Asianet TamilFirst Published Jan 28, 2022, 9:27 AM IST
Highlights

ஆளும் திமுகவில் வார்டு கவுன்சிலர் பதவிகளைப் பிடிக்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களைக் கட்சி நிர்வாகிகள் சுற்றி வருகின்றனர். மேலும் சுழற்சி முறையில் வார்டுகள் பெண்களுக்குரியதாக மாற்றப்பட்டிருந்தால், அந்த வார்டில் மனைவிகளுக்கு சீட்டு வாங்கி தரவும் முந்தியடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கவுன்சிலர் பதவியை கட்சி நிர்வாகிகளின் மனைவிகளுக்கு ஒதுக்காமல் மகளிரணியைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கும்படி திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்டன. இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதால், கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாகியுள்ளன். மேலும் திமுக, அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தையும் வேகம் எடுத்துள்ளன. இதற்கிடையே, இந்த முறை மேயர், சேர்மன் பதவிகள் மறைமுக தேர்தல் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதனால், ஆளும் திமுகவில் வார்டு கவுன்சிலர் பதவிகளைப் பிடிக்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களைக் கட்சி நிர்வாகிகள் சுற்றி வருகின்றனர். மேலும் சுழற்சி முறையில் வார்டுகள் பெண்களுக்குரியதாக மாற்றப்பட்டிருந்தால், அந்த வார்டில் மனைவிகளுக்கு சீட்டு வாங்கி தரவும் முந்தியடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்களால் வார்டில் போட்டியிட முடியவில்லையென்றால், மனைவிகளுக்கு கவுன்சிலர் சீட்டு வாங்கித் தருவதை ஆண் நிர்வாகிகள் உத்தியாகவே வைத்திருக்கிறார்கள். திமுகவில் மட்டுமல்ல, எல்லா கட்சிகளிலும் இது நடைபெறுகின்றன. இந்நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மகளிரணியினருக்கு வாய்ப்புகளை அதிகளவில் தர வேண்டும் என்று கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தேர்த்ல் தொடர்பாக ஸ்டாலின், பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  மகளிரணியை பலப்படுத்தும் வகையில், மகளிருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மகளிரணியைச் சேர்ந்தவர்களுக்கே பெரும்பாலும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நேற்றையக் கூட்டத்தில் ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.  மேலும் வழக்கமாக மனைவிமார்களுக்கு வார்டுகளை பெற்று தரும் நடவடிக்கைகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட வேண்டாம் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகளிரணியைப் பலப்படுத்த இது உதவும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்ததாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும் தேர்தலில், 8 மாத திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் கூட்டணி கட்சியினருடன் விரைந்து பேச்சுவார்த்தையை முடித்து, பிரசாரத்துக்கு செல்லும்படியும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக திமுக தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!