உள்ளாட்சியில் வெற்றி யாருக்கு? எடப்பாடி எடுத்த ஸ்பெஷல் சர்வே.. மிரண்டு போய் ஸ்கெட்ச் போடும். தி.மு.க

By Ganesh RamachandranFirst Published Jan 28, 2022, 8:13 AM IST
Highlights

எடப்பாடியாரின் சர்வே முடிவை அறிந்து கொண்ட  தி.மு.க. சற்று மிரண்டுதான் போனதாம். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு பிரசார பிளானையே மாற்றியுள்ளதாம்..

திடுதிப்புன்னு இப்படி உள்ளாட்சி தேர்தல் வந்து நிற்குமென்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நினைக்கவில்லை. தேர்தல் நிச்சயம் வரும், ஆனால், கொஞ்சம் நாளாகும்! என்று நினைத்து சற்றே ஏகாந்த மனநிலையில் இருந்தனர். ஆனால், கொரோனா பரவல் மற்றும் சில அரசியல் காரணங்களுக்காக தேர்தலை தள்ளிப்போடலாம் என்று முயன்ற தி.மு.க.வுக்கு நீதிமன்றம் செக் வைத்தது. தள்ளிப்போட முயற்சித்த அதேவேளையிலும், ஒரு வேளை உடனே தேர்தலை நடத்த வேண்டிய சூழல் வந்துவிட்டால் என்ன செய்ய? என்று யோசித்து நேர்காணல் உள்ளிட்ட பல விஷயங்களை முடித்து, பக்காவாக வேட்பாளர் லிஸ்டை தயார் செய்துவிட்டது தி.மு.க.

தேர்தல் அறிவிப்பு வந்ததும் தடபுடலென தயாராக துவங்கியுள்ளன அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும்.

இந்நிலையில் மாஜி முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு வசப்படும்?’ என்று ஒரு சர்வேவை தனி டீமை வைத்து தமிழகம் முழுக்க நடத்தியிருக்கிறார். அதன் முடிவுகள் அவரையே மலைக்க வைத்துள்ளதாம்.

அதாவது, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனால் சந்தோஷம்! என தி.மு.க.வும், விரைந்து நடந்தால் சந்தோஷம்! என்று அ.தி.மு.க.வும் நினைக்க ஒரே காரணம்தான். அதாவது, ஆளும் தி.மு.க. ஆட்சி மீது தமிழக மக்கள் சற்று ஏமாற்றம் மற்றும் அதிருப்தியோடு இருப்பதாக உளவுத்துறையின் சர்வே ரிப்போர்ட் சொல்லியதாக ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது அரசியல் அரங்கில்.

அதற்கான காரணங்களாக….தி.மு.க. தன் தேர்தல் வாக்குறுதியில் தந்த மிக முக்கியமானதான ‘குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் நிதி உதவி’ என்பதை இன்னும் செயல்படுத்தவில்லை! என்பதும், ‘தைப்பொங்கலுக்கு நிதி தரவில்லை, தந்த பொங்கல் பரிசுத்தொகுப்பும் தரமானதாக இல்லை.’ என்பவை சுட்டிக்காட்டப்படுகின்றன.

இதை மையமாக வைத்துதான் எடப்பாடியார் உத்தரவில் நடந்த சர்வேயிலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்த சர்வே ரிசல்ட்டும் மதில் மேல் பூனையாக உள்ளதாம். அதாவது தி.மு.க. தன் தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றவில்லை! என்று கோபப்படுவோருக்கு நிகராக, அ.தி.மு.க. ஆட்சி மிக முழுமையாக அரசு கஜானாவை துடைத்து வைத்துவிட்டு போயிடுச்சு, இவ்வளவு பெரிய திட்டத்துக்கான நிதிக்கு எங்கே போவார் முதல்வர்? என்று கேட்கும் நபர்களும் இருக்கிறார்கள். அதேப்போல்தான் தைப்பொங்கலுக்கு பணம் தரவில்லை! என்பதிலும் அரசுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் சம அளவில் மக்கள் கருத்து இருக்கிறதாம்.

இதைப்பார்த்துதான் மலைத்திருக்கிறார் எடப்பாடியார். இங்குட்டும் இல்லாமல், அங்குட்டும் இல்லாமல் இப்படி நட்ட நடுவா மதில்மேல பூனை மாதிரி நிக்குதே முடிவு! என்று மண்டை காய்ந்திருப்பவர், அதிருப்தியாளர்களின் சதவீதத்தை பிரசாரத்தின் மூலம் அதிகப்படுத்தும் முடிவை அதிரடியாக எடுத்துள்ளார். அதேவேளையில் எடப்பாடியாரின் சர்வே முடிவை அறிந்து கொண்ட  தி.மு.க. சற்று மிரண்டுதான் போனது. பிறகு சுதாரித்துக் கொண்டு, ‘நிதி ஆதாரங்களை அ.தி.மு.க. அரசு சிதைத்துவிட்டு சென்ற காரணத்தாலேயே உடனடியாக சில திட்டங்களை துவக்க முடியவில்லை. மக்கள் கொஞ்சம் பொறுக்க வேண்டும். விரைவில் உங்களுக்கு சர்ப்பரைஸ் தருகிறோம்’ எனும் ஸ்டைலில் பிரசார்த்தை துவக்கியிருக்கிறது. இதில் யாருடைய பிரசாரத்தை அதிக மக்கள் நம்புகிறார்களோ அக்கட்சியே ஜெயிக்கும்!

click me!