அமைச்சர்களுக்கு விரைவில் வாய்பூட்டு..! திமுக இமேஜை காப்பாற்ற வேறு வழியே இல்லையாம்?

By Selva KathirFirst Published Jun 24, 2021, 10:53 AM IST
Highlights

பொதுவாக திமுக என்றால் பகுத்தறிவு கட்சி என்றும் அக்கட்சி நிர்வாகிகள் அனைவருமே புத்திசாலிகள் என்கிற தோற்றம் கலைஞர் காலம் தொட்டே உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை எல்லாம் அடித்து நொறுக்குவது போல் அமைச்சர்களின் பேச்சு அரங்கேறி வருகிறது

திமுக எதிர்கட்சியாக இருந்தது வரை அக்கட்சிக்காக பேசி வந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராசா போன்றோரால் எப்படி திமுக இமேஜ் டேமேஜ் ஆனதோ அதே போல் தற்போது அமைச்சர்களாகியுள்ள பிடிஆர், மா.சுப்பிரமணியனால் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது திமுக.

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருந்த போது எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு குறித்து ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையானது. அவர் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அந்த அளவிற்கு அவரது பேச்சு எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆ.ராசாவை அடக்கி வாசிக்கும்படி அப்போதே திமுக மேலிடம் அறிவுறுத்தியது. சொல்லப்போனால் ஆ.ராசாவின் இந்த பேச்சு கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கான வாய்ப்புகளை குறைத்தது என்றே கூட பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் அமைச்சர்கள் சிலர் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமலேயே பேசுவதால் ஆட்சிக்கும் கட்சிக்கும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்து அமைச்சரவை பதவி ஏற்றதுமே நிதி அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது துறைக்கு தொடர்பே இல்லாத அறநிலையத்துறை விவகாரங்கள் குறித்து பேசினார். அதுவும் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு குறித்து அவர் பேசிய பேச்சுகள் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. திமுக மேலிடம் அழைத்து கண்டித்ததை தொடர்ந்து பழனிவேல் தியாகராஜன் இனி ஈஷா குறித்து பேசப்போவதில்லை என்று அறிக்கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய கொரோனா நிவாரண பணிகள் தொடர்பான நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர்.

இது பெரும் சர்ச்சையான நிலையில், கொரோனா தொடர்பான பணிகளில் ஆர்.எஸ்.எஸ் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேள்வி  எழுப்பப்பட்டது. ஆனால் கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் கூறியது போல் தற்போது அது மக்கள் இயக்கமாக மாறிவிட்டது என்று கூறிவிட்டு சென்றால் அமைச்சர். இது அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான சேவா பாரதியை மக்கள் இயக்கம் என்று கூறிவிட்டார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் உண்மையில் மா.சு. கூறியது முதலமைச்சர் கூறியது போல் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை மக்கள் இயக்கமாக மாறியுள்ளது, அதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கின்றனர் என்பது  தான்.

ஆனால் செய்தியாளரின் கேள்வியை சரியாக உள்வாங்காமல் பதிலை சரியாக மா.சு.வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்த விவகாரம் தொடர்பாக மா.சு. விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த வாரம் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பேசினார். அப்போது திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் எப்போது பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று கேட்டதற்கு, விலையை குறைப்போம் என்று சொன்னோம், தேதி போட்டோமா? என்று பதில் கேள்வி கேட்டு சர்ச்சையானது. இதனால் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய விஷயங்களை எல்லாம் நிறைவேற்றுமா என்கிற சந்தேகம் எழுந்தது.

இவற்றுக்கு எல்லாம் உச்சமாக சட்டப்பேரவையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் கொடுக்கப்படுவதா முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் குற்றஞ்சாட்ட, அதற்கு கொரோனா இல்லாதவர்களுக்கு இருக்கிறது என்று கொடுத்தால் தவறில்லை, கொரோனா இருப்பவர்களுக்கு இல்லை என்ற  கொடுத்தால் தான் தவறு என்று நூதன பதிலை அமைச்சர் மா.சு தெரிவிக்க சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் அனைவருமே அதிர்ந்து போய்விட்டனர்.

பொதுவாக திமுக என்றால் பகுத்தறிவு கட்சி என்றும் அக்கட்சி நிர்வாகிகள் அனைவருமே புத்திசாலிகள் என்கிற தோற்றம் கலைஞர் காலம் தொட்டே உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை எல்லாம் அடித்து நொறுக்குவது போல் அமைச்சர்களின் பேச்சு அரங்கேறி வருகிறது. இதனால் சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி போன்றோரை மட்டும் இனி பேச வைக்கலாம் மற்ற அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு போடலாம் குறிப்பாக அமைச்சர் பி.டி.ஆருக்கு தடையே விதிக்கலாமா? என திமுக மேலிடம் ஆலோசிக்கத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

click me!