
தேர்தலுக்கு முன்பு வரை எலியூம் பூனையுமாக இருந்த பாமக – திமுக கட்சிகள் ராமதாசின் சாமர்த்தியமான நடவடிக்கையால் வன்னியர்கள் இடஒதுக்கீடு விவகாரத்தில் பரஸ்பரம் இணைந்து செயல்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு பத்து புள்ளி ஐந்து சதவீத தனி இடஒதுக்கீடு எனும் தனது 30 ஆண்டு கால கோரிக்கையை முன் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பாமக போராட்டங்களை முன்னெடுத்தது. இதனை அடுத்து அதிமுகவுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையின் போது வன்னியர்களுக்கு பத்து புள்ளி ஐந்து சதவீத தனி இடஒதுக்கீட்டிற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ் நிபந்தனை விதித்தார். இதனை ஏற்று சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதன் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அப்போதே தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் சமயத்தில் அவசர அவசரமாக வன்னியர்களுக்கு அதிமுக அரசு இடஒதுக்கீடு வழங்கியுள்ளதாகவும், இது முறையாக செய்யப்படவில்லை, எனவே திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று பிரச்சாரம் செய்தார். அப்போது பாமக நிர்வாகிகள் இதனை மிக கடுமையாக விமர்சித்தனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி இடஒதுக்கீடு கொடுத்த நிலையில் மு.க.ஸ்டாலின் வன்னியர்களை குழப்ப முயல்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை மையமாக வைத்தே வட மாவட்டங்களில் திமுக, பாமக பிரச்சாரம் இருந்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்றே மாவட்டங்களில் வன்னியர் இடஒதுக்கீடு அறிவிப்பு தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் மற்றபடி விழுப்புரம் தொடங்கி கிருஷ்ணகிரி வரை தேர்தலில் இந்த அறிவிப்பு அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. இதனால் தேர்தல் முடிந்த பிறகு தான் ஏற்கனவே கூறியது போல் புதிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் மு.க.ஸ்டாலின் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக, சில நாட்களாக விமர்சனத்தில் பக்குவத்தை கடை பிடித்து வருகிறது. இதே போல் அன்புமணி ராமதாஸ், திமுகவின் சிறப்பான செயல்பாடுகளை மனம் திறந்து பாராட்டவும் செய்தார். அதிலும் அதிகாரிகள் நியமனத்தில் திமுக அரசை அவர் வெளிப்படையாக பாராட்டினார்.
இந்த நிலையில் அண்மையில் பாமக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது ராமதாஸ் எழுதிய கடிதம் ஒன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. அது குறித்த தகவல்கள் அப்போது வெளியாகவில்லை. ஆனால் சட்டப்பேரவையில் பேசிய போது ராமதாஸ் எழுதிய கடிதம் குறித்த விவரத்தை ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு பத்து புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அரசாணை வெளியிட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை ராமதாஸ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக ஸ்டாலின் கூறினார்.
தேர்தலுக்கு முன்பு வரை வன்னியர்கள் இடஒதுக்கீடு சட்டத்தை திமுக அரசு புதிதாக கொண்டு வரும் என்கிற ரீதியில் ஸ்டாலின் பேசி வந்தார். ஆனால் தேர்தல் முடிந்த நிலையில் தனது நிலைப்பாட்டை ஸ்டாலின் மாற்றிக் கொண்டது தெரிய வருகிறது. இதற்கு காரணம் ராமதாஸ் சாமர்த்தியமாக ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் தான் என்கிறார்கள். அந்த கடிதத்தை படித்த ஸ்டாலின் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டிய நியாயத்தை புரிந்து கொண்டு அதனை அதிகாரிகளிடம் கூறியுள்ளதாகவும், விரைவில் அதனை ஆராய்ந்து அதிகாரிகள் ஆவண செய்வார்கள் என்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பு வரை திமுகவை கடுமையாக எதிர்த்தாலும் வன்னியர்கள் இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசின் கரிசனம் தேவை என்பதை ராமதாஸ் உணர்ந்துள்ளார். மேலும் வன்னியர் இடஒதுக்கீடு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு ராமதாஸ், அன்புமணி போன்றோரின் லட்சியம். எனவே இந்த விவகாரத்தில் அதிரடி எல்லாம் சரியாக வராது என்பதை உணர்ந்து ராமதாஸ் தனது எம்எல்ஏக்கள் மூலம் சாமர்த்தியமாக காய் நகர்த்தி பாதி கிணறு தாண்டிவிட்டதாகவும், விரைவில் இதற்காக மு.க.ஸ்டாலினை அன்புமணி சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள்.