மழைநீர் தேங்காது என மெத்தனமாக இருக்க வேண்டாம்..! அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்

By Thanalakshmi VFirst Published Sep 26, 2022, 2:51 PM IST
Highlights

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
 

அதில் முதலமைச்சர் பேசிய உரையில்,”  சென்னையிலே கடந்த ஆண்டு அதிக அளவிலே வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளை கண்காணித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகமிக அவசியமானது. இதுமட்டுமின்றி சென்னையின் முதன்மையான நீராதாரங்களாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் ஏற்கனவே போதிய அளவில் நீர் இருப்பு உள்ளது. 

ஆகவே பருவமழையையொட்டி இந்த ஏரிகளின் நீர்வரத்து, நீர் இருப்பு அளவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து, அதை முறையாக கையாள வேண்டும். மழைக் காலத்தின்போது நகர்ப்புறங்களில் மின்கம்பிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் தடுப்புகளின்றி இருப்பது விபத்துகளை ஏற்படுத்தக்கூடும்.  அதுமட்டுமின்றி, கடும் போக்குவரத்து நெரிசலையும் அவை ஏற்படுத்திவிடுகிறது.  

மேலும் படிக்க:இன்று 23 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

எனவே, மழைவெள்ளத் தடுப்பு தொடர்பாக துவக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும் (Monitoring Officers) மழைக்காலத்திற்கு முன்பாக ஓரிரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று பார்வையிட வேண்டும். 

அந்த  மாவட்டத்திலேயே தங்கி, பள்ளிக் கட்டடங்கள் மற்றும் நிவாரண மையங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிக் கட்டடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தூர்வாரும் பணி மற்றும் சீரமைப்பு பணி நடைபெற்றுள்ளதால் சென்னை நகரில் முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்காது என்று நினைப்போடு மெத்தனமாக இருந்து விடக் கூடாது. ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க:சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லை- மு.க.ஸ்டாலின்

கடந்த முறை வானிலை எச்சரிக்கைத் தகவல்களைக் குறித்த காலத்தில் பெறுவதில் தாமதங்கள் காணப்பட்டது.  அதனைத் தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு உரிய காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவல்களை பெறுவதோடு தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் அளிக்கும் தரவுகளையும், வருவாய்த் துறையில் ஒப்பிட்டு அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான அறிவிப்புகளைச் செய்ய வேண்டும்.

நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.  பொதுத் தொலைபேசி எண்களைப் பரப்ப வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எம மொத்தத்தில் மக்களைக் காக்க வேண்டும் என்பதே நமது இலக்கு என்று முதலமைச்சர் பேசினார்.

மேலும் படிக்க:பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்..! தமிழகம் முழுவதும் 14 பேர் கைது- டிஜிபி
 

click me!