சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... இரும்பாலையில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 20, 2021, 11:15 AM IST
Highlights

சேலம் இரும்பாலையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளைக் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாடி வந்தனர். எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. 

அதன் ஒருபகுதியாக சேலம் இரும்பாலையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளைக் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஆய்வு நடத்த உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலில் சேலம் வந்தடைந்தார். 

 முதற்கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி 10 நாட்களில் சேலம் உருக்காலையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார். ஆக்ஸிஜன் வசதியுடன் 500 படுக்கைகளை கொண்ட சிகிச்சை மையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். உடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இருந்தனர். 

ஏற்கனவே சேலம் அரசு மருத்துவமனைகளில் 1583, தனியார் மருத்துவமனைகளில் 2896 படுக்கைகள் உயிர்வளி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள  நிலையில், இரும்பாலையில் புதிதாக 500 படுக்கை வசதிகளைக் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

click me!