12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை... முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 25, 2021, 1:54 PM IST
Highlights

உச்சநீதிமன்ற அறிவிப்பை அடுத்து 12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. சிபிஎஸ்இ 12 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 

இதனிடையே கொரோனா தொற்று காரணமாக தமிழகம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று நீதிபதி கன்வில்கர் அமர்வில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் ரத்து செய்யப்பட்டுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களை மதிப்பிடக்கூடிய முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை அடுத்த 10 நாட்களுக்குள் முடிவு செய்துவிட வேண்டும் என்றும், ஜூலை 31ம் தேதிக்குள் +2 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற அறிவிப்பை அடுத்து 12ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!