“இன்னும் 2 வாரத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அதனால்”... ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளை அலர்ட் செய்த ஸ்டாலின்

By Kanimozhi PannerselvamFirst Published May 7, 2021, 6:26 PM IST
Highlights

இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழா, முதல் கோப்பில் கையெழுத்திடுவது, முக்கிய அதிகாரிகள் நியமனம் ஆகிய அனைத்தையும் முதல் நாளிலேயே முடித்த ஸ்டாலினுக்கு முன்னால் கொரோனா என்ற மிகப்பெரிய சவால் ஒன்று உள்ளது. 

பதவியேற்கும் முன்பே தமிழகத்தில் தினசரி அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிதாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. 

இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்தும், தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர்களிடம்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழக மக்கள் திமுகவின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கொரோனா தொற்றின் 2வது அலையால் தமிழகம் எப்போதும் சந்திக்காத இக்கட்டான நிலையை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. இந்த தலையாய பொறுப்பை நிறைவேற்றுவதில் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளின் பொறுப்பு அளப்பறியது. 

மக்கள் உயிர்காக்கும் இந்த சேவையில் நீங்கள் அரசுக்கு தோள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 25 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2 வாரங்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது. அதற்கேற்ப படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன், மருந்துகள் ஆகியவற்றின் தேவைகளை உறுதிபடுத்த போர்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை. நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மருத்துவத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை ஆகியன முழுமையாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அது இந்த காலத்திற்கான முக்கிய தேவை என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 
 

click me!