சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் கடந்த ஜூன் 11-ம் தேதி 27 மாவட்டங்களில் டாஸ்டாக், சலூன், பூங்கா உள்ளிட்டவைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் 50 சதவீதம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த பேருந்துகள் மாவட்டத்திற்குள்ளேயே இயங்கும் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கு மட்டும் மாவட்டங்களுக்குள்ளேயே பேருந்துகளை இயக்கலாமா?, வெளி மாவட்டங்களுக்கான பேருந்துக்களை இயக்குவது குறித்து அடுத்த கட்ட தளர்வில் பார்த்துக் கொள்ளலாமா? என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பேருந்துகளை இயக்க முடிவெடுத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அடுத்தக்கட்ட தளர்வில் கட்டாயம் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.