#BREAKING அடிதூள்... திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம்... தமிழக அரசு அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 3, 2021, 6:22 PM IST
Highlights

திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கோரதாண்டவம் ஆடியதை அடுத்து தளர்வுகற்ற முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. முழு ஊரடங்கின் பலனாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது.  இருப்பினும் கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு 4 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணமாக வழங்க ஆணையிட்டது. 

இதில் முதற்கட்டமாக அனைத்து அரிசி அட்டைதார்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், இன்று மீதமுள்ள ரூ.2 ஆயிரத்தையும், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதுமட்டுமின்றி முன்களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, கொரோனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணத்தொகை, கோயிலில் நிலையான மாதச்சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு 4000 ரூபாய் தொகையும், 10 கிலோ அரிசியும், மளிகைப் பொருள் தொகுப்பும் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். ஏற்கனவே அரசு பேருந்துகளில் மகளிர் பயணிக்க இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது போல் தங்களுக்கும் அறிவிக்க வேண்டுமென திருநங்கைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருந்த முதல்வர், இன்று முதல் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து திருநங்கைகளின் மற்றொரு கோரிக்கைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவி சாய்த்துள்ளார். ஆம், ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படுவதைப் போலவே தங்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டுமென திருநங்கைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 11,449 திருநங்கைகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2 ஆயிரத்து 956 திருநங்கைகளுக்கு நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர் மீதமுள்ள 8 ஆயிரத்து 493 பேருக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

click me!