பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ஈபிஎஸ் அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Jul 2, 2020, 9:29 PM IST
Highlights

இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான குற்றவாளி கைது செய்து செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்தி, உரியத் தண்டனையைப் பெற்றுத் தரத் துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். 

புதுக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 7 வயது மகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் திடீரென காணாமல் போனார். சிறுமியை பெற்றோரும் உறவினர்களும் அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை. எங்கேவாது விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார் என்று பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால், இரவு ஆகியும் சிறுமி வீட்டுக்கு வரவில்லை. 
இதையடுத்து பெற்றோரும் உறவினர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதனையடுத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தநிலையில், சிறுமியின் உடல் கருவேல மரங்கள் நிறைந்த புதர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது. அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பொதுவெளியிலும் சமூக ஊடங்களிலும் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல் கிராமத்திலிருந்து ஜூன் 30ம் தேதி முதல் காணாமல் போன சிறுமி, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் ஜூலை 1ம் தேதி அன்று மாலை வண்ணாங்குளம் என்ற ஊரணியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான குற்றவாளி கைது செய்து செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்தி, உரியத் தண்டனையைப் பெற்றுத் தரத் துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

click me!