மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை... முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என்னவாயிற்று..?

By Kanimozhi PannerselvamFirst Published Apr 19, 2021, 1:08 PM IST
Highlights

குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக நேற்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனிடையே கடந்த 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதனை முன்னிட்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பங்கேற்றார். 

கடும் வெயில், கொரோனா பரவல் என எதையும் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளொன்றுக்கு 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தொடர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். 

தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வரும் சமயத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என்னவாயிற்று முதலமைச்சருக்கு என பதற்றமான மனநிலை மக்களிடையே உருவானது. இதனிடையே ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக நேற்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

குடலிறக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் தொடர்ந்து 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அதே மருத்துவமனையில் முதலமைச்சர் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!