வருவாயை இரட்டிப்பாக்க பலே யுக்தி... ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய துறை அமைச்சர்களுக்கு முதல்வர் போட்டஉத்தரவு!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 13, 2021, 07:10 PM ISTUpdated : Jul 13, 2021, 07:12 PM IST
வருவாயை இரட்டிப்பாக்க பலே யுக்தி... ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய துறை அமைச்சர்களுக்கு முதல்வர் போட்டஉத்தரவு!

சுருக்கம்

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஆய்வுக் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. 

கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது தொற்று பரவல் குறைந்ததை அடுத்து துறை ரீதியான வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக நாள்தோறும் துறை ரீதியான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று தலைமைச் செயலகத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதியதாகச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர்  நாசர், தலைமைச் செயலாளர் இறையன்பு,, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன்,  கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  ஜவஹர்,  மீன்வளத்துறை ஆணையர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்திற்குக் கால்நடைகளின் பங்கு மிக முக்கியமாக இருப்பதால், கால்நடைகளுக்குத் தரமான சிகிச்சை அளித்தல், கால்நடைகளை நோயிலிருந்து காப்பாற்றிடத் தடுப்பூசி செலுத்தும் பணியினை மேற்கொண்டு அவற்றின் நலனைப் பாதுகாத்தல், கால்நடை மருத்துவச்சேவை கிடைக்கப்பெறாத தொலைதூரக் கிராமங்களில் வசித்திடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் கால்நடை மருத்துவமனை மூலம் கால்நடைகளுக்குச் சிகிச்சை அளித்தல் ஆகிய பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளும்படி  முதலமைச்சர்  அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரித்து, கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்திட, உயர் மரபுத்திறன் கொண்ட காளைகளிலிருந்து நல்ல தரமான உறைவிந்தினைப் பயன்படுத்திச் செயற்கைமுறைக் கருவூட்டல் பணியைச் செயல்படுத்துதல், கால்நடைகளுக்குத் தேவையான அளவு பசுந்தீவன உற்பத்தியினை அதிகரித்தல், ஆகிய பணிகளை முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளைத் தொய்வின்றிச் செயல்படுத்திடவும், கால்நடை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்திடவும்  முதலமைச்சர் அறிவுறுத்தினார். கடல் மீன்வளத்தைப் பாதுகாத்திடவும், அதனை முறையாகப் பயன்படுத்திடவும், மீன்களைச் சுகாதாரமாகக் கையாளுவதற்கு ஏதுவாகப் புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடவும், புதிய தொழில் நுட்பங்கள் மூலம் உள்நாட்டு மீன் உற்பத்தி, வண்ணமீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை அதிகரித்திடவும், ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு முறைகளின் மூலம் வருவாயினை இரட்டிப்பாக்குவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 

மேலும், கடற்பாசி வளர்ப்பு, கடலில் கூண்டுகள் மூலம் மீன் வளர்ப்பு போன்ற மாற்று வாழ்வாதாரத் திட்டங்களையும் முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.  பால்வளத் துறையின் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலைக் கொள்முதல் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க புதிய வகையான விற்பனை வியூகங்களை வகுத்து வருவாயைப் பெருக்கிடவும், செயலிழந்த பால் உற்பத்தியாளர் சங்கங்களைப் புதுப்பிக்கவும், இணைய வழியில் உறுப்பினர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் பின்னூட்டம் மற்றும் குறைகள் அறியப்பட்டு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும் எனவும், திட்டங்கள் அனைத்தையும் திறம்படச் செயல்படுத்திடவும் அறிவுறுத்தியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!