ஆர்.கே.நகரில் உள்ள 2 மதுக்கடைகளை மூட வேண்டும்! நடிகர் விஷால் கோரிக்கை

First Published Feb 5, 2018, 4:05 PM IST
Highlights
Close to 2 tasmac shops in RKNagar! Actor Vishal demand


ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இரண்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், மூட உள்ள 500 மதுக்கடைகள் பட்டியலில் இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவண செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசிடம், நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து அதனை தொடங்கியும் வைத்தார். ஜெ. பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு
மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை.

எனவே, மூடவிருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில் இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவண செய்யுமாறு தமிழக அரசையும், ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் தினகரனையும் கேட்டுக்கொள்கிறேன். இதேபோல் தமிழ்நாடு முழுக்கவிருக்கும் பிரச்சனைக்குரிய, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்தப் பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்
என்று தெரிவித்துள்ளார்.

click me!